குரோம்பேட்டை நியூ காலனியைச் சேர்ந்த சமூக சேவகர் வி.சந்தானம் இவருக்கு தற்போது வயது 86 ஆகிறது. இந்த வயதிலும் சுறுசுறுப்பாக தினசரி மக்கள் பிரச்சனைக்காக பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்தி வெற்றியும் பெற்று வருகிறார்.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருஷ்கே உள்ள மூதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தானம். இவர் எஸ்எஸ்எல்சி படிப்பை முடித்ததும் மும்பைக்கு சென்று பணிபுரிந்தார். பின்னர் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு முழு நேர மக்கள் பணியை மேற்கொண்டார். தொழிற்சங்கத்தில் பணியாற்றியதால் அவருக்கு வி.பி.சிங் டபிள்யூ. வரதராஜன் போன்ற தலைவர்களோடு நட்பு ஏற்பட்டது. ஓய்வு பெற்ற பிறகு குரோம்பேட்டை நியூ காலனியில் அவரும் நண்பர்களும் 10 பேர் சேர்ந்து வாங்கிய இடத்தை தமிழக அரசு கையகப்படுத்தியது. அப்போது முதல்வராக இருந்த அண்ணாவுக்கு சந்தானம் 16 முறை பதிவு தபால் கடிதம் அனுப்பினார். 15 கடிதங்கள் அண்ணா கவனத்திற்கு வராத நிலையில் 16 வது கடிதத்தை அண்ணா பார்த்து விட்டார். உடனடியாக தலைமை செயலகத்திற்கு வரவழைக்கப்பட்டு அண்ணா அவரை சந்தித்தார். ஒரு முதல்வருக்கு 16 கடிதங்கள் அனுப்பி உள்ளீர்கள் விடாமுயற்சியை பாராட்டுகிறேன். இது போன்ற மக்கள் நலப்பணியாளர் பணிகளை செய்ய வேண்டும் என்று பாராட்டினார். மேலும் அவரிடம் கையகப்படுத்திய நிலமும் திரும்ப வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மக்கள் நல பிரச்சனைகளுக்காக பத்திரிகைகளுக்கு கடிதம் அனுப்புவது அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது என தொடர்ந்து சமூக சேவையில் ஈடுபட்டார். 2000-க்கும் மேற்பட்ட கடிதங்களையும் 1700-க்கும் மேற்பட்ட தகவல் அறியும் உரிமை சட்ட மனுக்களையும் அனுப்பி மக்கள் சேவை செய்து வருகிறார். குரோம்பேட்டை நியூ காலனி குடியிருப்போர் சங்கத்தை தொடங்கி அதன் சார்பிலும் சேவை செய்து வருகிறார். மக்கள் அடிப்படை பிரச்சனைகளுக்காக 200க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தியுள்ளார். 21 முறை போலீசார் கைது செய்யப்பட்டு அன்று மாலையே விடுவிக்கப்பட்டுள்ளார். குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் பல்வேறு அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் தொடங்கப்படுவதற்கு சந்தானத்தின் பங்கு மிக முக்கியமானதாகும். எம்.எஸ்.சுவாமிநாதன் விருது, சேவாரத்னா விருது ராஜாஜி விருது உட்பட 25க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். இது பற்றி சந்தானம் கூறும் போது நான் சிறுவயதில் வறுமையில் கஷ்டப்பட்டேன். இந்த நிலை யாருக்கு வரக்கூடாது என்பதற்காகவே சமூக சேவையிலும், பிறருக்கு உதவுவதிலும் கவனம் செலுத்துகிறேன். எனது சேவைப் பணிகளுக்கு எனது மனைவி ஸ்ரீமதி, மகள்.டாக்டர் சியாமளா, மகன்கள் பாலாஜி, ஸ்ரீதர் மற்றும் உறவினர்கள் உறுதுணையாக இருக்கின்றனர். சரணாகதி என்ற சேவை அறக்கட்டளை சார்பிலும் உதவிகள் தொடர்கின்றன என்று தெரிவித்தார். சந்தானம் தனது சமூக சேவை பணிகளை பற்றி மூன்று புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.