
ஆடிப்பூரம் என்பது ஆண்டாளின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது.
பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது போல் , மங்கையர்களுக்கு எல்லாம் அரசியான அந்த அம்மனுக்கும் வளைகாப்பு நடத்திடும் நாளே ஆடிப்பூரம் ஆகும்.
இந்நிகழ்விற்கு ஒரு சுவையான கதை சொல்லப்படுகிறது.
மாயமான வளையல்கள்:
ஆந்திராவிலிருந்து ஒரு வளையல் வியாபாரி சென்னை வந்து வளையல்களை விற்றுவிட்டு, மீதி வளையல்களோடு ஊர் திரும்புகையில், பெரியபாளையம் வந்தார்.
சோர்வோடு மரத்தடியில் படுத்தவர் உறங்கிவிட்டார். காலையில் கண்விழித்ததும் பார்த்தபோது வளையல்களைக் காணாமல் திகைத்தார். எங்கு தேடியும் வளையல் கிடைக்காமல் போகவே, கவலையோடு ஊர் திரும்பினார்.
வேப்ப மரத்தடியில் அம்மன்:
அன்று இரவு, அவரது கனவில் தோன்றிய அம்மன் , வளையல்களை தான் அணிந்து கொண்டதாகவும், பெரியபாளையம் வேப்பம் மரத்தின் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கும் தனது பெயர் பவானி என்றும், தன்னை வணங்குவோரின் வாழ்க்கை செழிக்குமெனவும் கூறியதோடு, வளையல் வியாபாரிக்கு வளங்களைத் தந்தார்.
பெரிய பாளையம் பவானி அம்மன்:
தான் கண்ட கனவை தன் நண்பர்கள், உறவினர்களிடம் கூறி, அவர்களுடன் சென்னை, பெரிய பாளையம் வந்தார் வளையல் வியாபாரி. பெரிய பாளைய மக்களிடம் தன் கனவில் தோன்றிய அம்மன் கூறியதைக் கூறினார்.
சுயம்புவாகத் தோன்றிய அம்மனுக்கு ஆலயம் கட்டி, வழிபாடு செய்தனர்.
வளையல் அணிய ஆசை:
அம்மனுக்கு வளையல் அணியும் ஆசை ஏற்பட்டதால்தான், அந்த வியாபாரியின் வளையல்களை எடுத்து அணிந்து கொண்டார்.அந்த ஆசையால் தன் புற்றிலிருந்தும் வெளிப்பட்டாள்.
மேலும் இச்சம்பவத்திற்குப் பிறகே, திரு ஆடிப்பூரம் தினத்தன்று எல்லா கோயில்களிலும் அம்மனுக்கு வளையல் சாற்றுகின்றனர்.
வளையல் காணிக்கை:
பக்தர்கள் தரும் வளையல் காணிக்கைகளை அம்மனுக்கு சாற்றிவிட்டு, பின்னர் அவற்றை பிரசாதமாக சுமங்கலி பெண்களுக்கு அளிப்பர்.
கர்ப்பிணி பெண்கள் அவ்வளையல்களை அணிந்து கொண்டால் சுகப்பிரசவம் ஆகும் என்றும், பிள்ளை வரம் வேண்டுவோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும், கன்னியருக்கு திருமணம் கைகூடும் என்றும் மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.
சுக்கிரன்
பூரம், சுக்கிரன் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரம் ஆகும்.சுக்கிரனின் தெய்வம் ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள் ஆவார். எனவேதான், ஆடிப்பூரத்தில் பிறந்த ஆண்டாள், ரங்கநாதரை நேசித்து, அவரையே மணந்தாள்.
சுக்கிரன் அருள் இருந்தால் தம்பதியர் ஒற்றுமை ஓங்கும்.