சென்னை குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் தாம்பரம் பகுதிகளில் அனைவராலும் நன்கு அறியப்பட்ட 86 வயது முதியவர் ஒருவர் உள்ளார். அவர் பெயர் வி.சந்தானம் அவரை அறியாதவர்கள் இந்தப் பகுதிகளில் இல்லை என்றே சொல்லலாம். மனுக்களை எழுதி எழுதி அவரது விரல்கள் தேய்ந்தேபோய் இருக்க வேண்டும். எந்த உயரதிகாரியையும் அவர் விட்டு வைக்கமாட்டார். ‘சில்வண்டு’ போல குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருப்பார். அவர் வாழ்க்கையே புகார் மனு, கோரிக்கை மனு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்று போய்க் கொண்டிருக்கிறது. ஒருநிகழ்வு, அவர் குடியிருக்கும் பகுதியில் ஓர் இடத்தில் மக்கள் குப்பைகளைக் கொட்டிக் கொண்டே இருந்தார்கள். ‘குப்பை கொட்டக் கூடாது’ என்று வைக்கப்பட்டிருந்த பலகை முழுகும் அளவுக்கு குப்பை சேர்ந்தது. அவர் அரும்பாடுபட்டு அந்தக் குப்பைகளையெல்லாம் அகற்றினார். மக்கள் மீண்டும் அங்கே குப்பை போடக்கூடாது என்பதை உணர்த்த அவரே. அந்த இடத்தில் ஒருநாற்காலியைப் போட்டு அமர்ந்து கொண்டு, “குப்பை கொட்ட விரும்புவர்கள் என் தலையில் கொட்டவும்” என்று ஒரு பதாகையும் வைத்து விட்டார். எல்லாரும் நமட்டுச் சிரிப்போடு அவரைக் கடந்து போனார்கள். அவர் மனைவி ஓடிவந்து. அவரை வற்புறுத்தி அழைத்துச் சென்றார். ஒரு மணிநேரம் கழித்து, அவர் அங்கேவந்து பார்த்தபோது குப்பைகள் நிறைந்து கிடந்தது. அந்த மனிதர் நொந்து போய் விட்டார். அப்பகுதியில் உள்ள ஓர் ஏரியின் ஆக்கிரமிப்பு களை அகற்ற அவர் போராட்டம் நடத்தியபோது மர்மநபர்களால் வெட்டப் பட்டார். வெட்டு தோளிலும், காலிலும் விழுந்து மூன்று மாதங்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். மீண்டும் தொடர்கிறது அவரது பொது நலத்தொண்டு.
எதற்கும் வன்முறைதான் தீர்வு என்று ஆகிவிட்ட இந்தக்கால கட்டத்தில், தீவிர தன்னார்வ சமூக ஆர்வலர்களின் உயிர் பாதுகாப்பு குறித்த பயம், அவர்களின் குடும்பத்துக்கு அதிகம் இருக்கிறது. இத்தகைய சமூகஆர்வலர்களின் பங்களிப்பு அதிகம் என்று கூட சொல்லலாம். நம்முடைய பகுதிகளில் உள்ள எல்லாகுறைகளும் அரசின் நேரடி கவனத்துக்கு எப்படிப் போகும்? குறிப்பிட்ட இடத்தில் உள்ள பிரச்னை மேலிடத்தை எட்டினால் தானே அதற்குத் தீர்வு கிட்டும்? அத்தகைய தூதுவர்கள் நம் சமூகஆர்வலர்கள்.
திரையில் காட்டப்படும் சமூகஆர்வலர் பாத்திரத்தைக் கொண்டாடுகிறோம். அதுவெறும் நடிப்பு, பிம்பம் என்று தெரிந்தும், மின்னுவ தெல்லாம் பொன் என்று நம்புகிறோம். அதேசமயம் நம்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலரை அடையாளம் காணத் தவறி விடுகிறோம்.
சின்னத் திரையில் ஒரு சின்ன நடிகருக்கே பெரிய ஊடக வெளிச்சம் கிட்டுகிறது. ஆனால் தம் பகுதியில் பல நல்ல விஷயங்களை முன்னெடுப் பவர்களை நாம் ஆதரிக்க வேண்டும். கொஞ்சம் தோள் கொடுக்க முன்வர வேண்டும். அரசு அனைவருக்கும் பாதுகாப்பு கொடுக்க முடியாது. அதற்கு சாத்தியமில்லை. அவர்கள் செய்யும் நல்ல செயல்களைப் பாராட்ட வேண்டும். ஒரு குற்றச்செயலுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பக்கம் பக்கமாக செய்திபோடும் ஊடகங்கள், நல்லது செய்பவர்களைப் பற்றியும் எழுதினால் அவர்கள் மகிழ்வடைவார்கள். குடும்பமும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.அவர்களும் புதிய உத்வேகத்துடன் பிரச்னைகளைக் கையில் எடுப்பார்கள். அனைவரின் ஆதரவும் அவர்களின் அச்சத்தைப்போக்கி, அவர்களை பீடு நடைபோடச் செய்யும்.
இன்னொரு விஷயத்தையும் நாம் பார்க்கலாம். தேவையில்லாமல் பொதுநலன் வழக்குபோடுபவர்களும் உண்டு. பைசா பெறாத விஷயத்துக்கு வழக்கு தொடர்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள். நீதிபதிகள் அந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்துவிட்டு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காகக் கண்டனம் தெரிவித்துவிட்டு, அபராதமும் விதிப்பார்கள். ஆனால் இவர்களோ, ‘சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தன்’ போல தொடர்ந்து பொதுநல வழக்குகளைத் தொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இன்னும் சிலர் பல உயர் அதிகாரிகளோடு அணுக்கமாக இருப்பதுபோல காட்டிக் கொண்டு கொஞ்சம் பெருமைப்பட்டு கொள்வார்கள்.
அரிமாசங்கங்கள், ரோட்டரிசங்கங்கள் போன்றவ சதி படைத்தவர்கள் உள்ளசங்கங்கள் பலபொதுச் சேவைகளைமுன்னெடுப்பது வரவேற்கப்பட வேண்டிய நற்செயல்.
ஒவ்வொரு பகுதிக்கும் நிறைய தேவைகள்/ அடிப்படை வசதிகள் வேண்டியுள்ளன. அதேபோல அரசு சரிசெய்ய வேண்டிய பிரச்னைகளும் உள்ளன. எல்லோரும் எது பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் சுயநலமாக வாழ்ந்தால் தீர்வு எப்படி கிடைக்கும்? தட்டினால் தானே கதவு திறக்கப்படும்? அப்படித் தட்டுபவர்கள் சமூக ஆர்வலர்கள். அவர்கள் கொடுக்கும் நியாயமான மனுக்கள், சரியான கரங்களைச் சென்று சேர்ந்தால் நலம் பயக்கும். நாமும் மகிழ்வோம். அதற்குப் பாடுபட்ட சமூக ஆர்வலரைக் கொண்டாடுவோம்.