
‘பித்ருக்கள்’ என்பது நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள். அவர்கள் தங்களது சந்ததியினர் பாக்ய பலம் பெற, வாழ்வில் முன்னேற, தடைகள் அகல, பல தோஷங்கள் நிவர்த்தியாக வருடத்தில் சில குறிப்பிட்ட தினங்களுக்கு பூலோகம் வந்து ஆசி வழங்குவதாக ஐதீகம். அதில் அமாவாசை நாள் மிகவும் சக்தி பொருந்திய நாளாகும்.
மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே, அமாவாசை எனப்படும் அந்த தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து உணவு படையலிட்டு ஆசி பெறும் போது, நமது பாக்ய ஸ்தானம் வலிமை பெறும். இதன் மூலம் திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய், கடன் தொல்லை போன்ற பிரச்சினைகளை நீக்கி கர்மவினைகளுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.
எவ்வாறு வழிபாடு செய்யவேண்டும்..?
அமாவாசை அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம். தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து வடகிழக்கு திசையில் வைத்து தெற்கு பார்த்து வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும்.
முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலை வாழை இலை படையல் போட்டு வணங்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவிற்க்கு தானமாக வழங்கவேண்டும்.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்து விட்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம். அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது.
வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக் கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.
அமாவாசை அன்று செய்ய கூடாதவை?
அமாவாசை அன்று வீட்டின் வாசல் பகுதியில் கோலம் போடக் கூடாது. எதற்காக இப்படி செய்ய கூடாது என்றால் நமது முன்னோர்கள் அமாவாசை அன்று பூமியை நோக்கி வருவதாக இந்து மதத்தில் ஒரு ஐதீகம் இருக்கிறது. அவ்வாறு வரும் பொழுது வாசலில் நாம் கோலம் போட்டு இருந்தால் உறவினர்கள் நமக்கு வழிபாடு செய்யவில்லை என்று நினைத்து திரும்பி சென்று விடுவார்களாம், பின் நமது வழிபாட்டினை நமது முன்னோர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களாம்.
இதன் காரணமாக தான் அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது என்று சொல்லப்படுகிறது. மேலும் அன்றைய தினத்தில் மிகக் கடினமான வேலைகள் உடல் ரீதியான வேலைகள் எதுவும் செய்யாதீர்கள். அவ்வாறு செய்யும் போது தவறி அடிப்பட்டால் ரத்தக் காயம் ஏற்படும். அடிப்பட்ட வீரியம் அதிகமாக இருக்கும் சீக்கிரம் ஆறாது. அமாவாசையன்று பதட்டமும், கோபமும் ஏற்பட்டால் முடிந்த அளவுக்கு மௌனத்தை கடைப்பிடியுங்கள்.
அமாவாசையன்று மௌன விரதம் இருப்பது மிகவும் சிறப்பு. உங்களை நீங்களே உணர வைப்பதற்கான விரதமாய் மௌன விரதம் இருக்கும். அன்றைய நாள் உங்களால் முடிந்த அளவுக்கு தானம், தர்மம் செய்வது ஐஸ்வர்யத்தை பெருக்கும். தேவையற்ற முடிவுகளை அமாவாசையில் எடுப்பதைத் தவிர்க்கலாம்.