புதுச்சேரி கடற்கரை சாலை மற்றும் சுற்றுலா தலங்களில் இளஞ்சிவப்பு நிறத்தில் விற்கப்படும் பஞ்சுமிட்டாய்யில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய ரசாயனம் கலக்கப்படுவதை உணவுப் பாதுகாப்பு துறை கண்டுடித்து பறிமுதல் செய்துள்ளது.

மேலும், பல்வேறு இடங்களில் இதுபோன்ற பஞ்சு மிட்டாய்களை விற்பனை செய்யும் 30க்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர்களை தேடும் பணியில் உணவு பாதுகாப்புத் துறை ஈடுபட்டுள்ளது.

புதுச்சேரி கடற்கரை சாலை, தாவரவியல் பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து வருகின்றனர். இவற்றில் விஷ தன்மை கொண்ட  ரசாயனம் கலப்பு இருப்பதாக சந்தேகம் கொண்டு  உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்து அவற்றை வாங்கி சோதனை செய்தனர்.

அதில் ரோடமின் பி(RHODAMINE-B) என்ற விஷ நிறமி இருப்பது தெரிய வந்தது. இது ஊதுவத்தி மற்றும் தீப்பெட்டியில் வண்ணத்திற்காக பூசப்படும் தொழிற்சாலை விஷ நிறமி ஆகும். குறைந்த விலைக்கு கிடைப்பதினால் இதனை வடமாநில இளைஞர்கள் தெரியாமல் வாங்கி பஞ்சு மிட்டாய் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதனை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்து இன்று பஞ்சு மிட்டாய் பறிமுதல் செய்தனர். மேலும் விற்பனை செய்த வட மாநில இளைஞர்களை பிடித்து வந்து விசாரணை நடத்தியதுடன் அவர்களில் சிலர் மீது வழக்கு பதிவு செய்தனர்.