அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் உயிரியல் பூங்கா இடையே விலங்கு பரிமாற்றம் செய்யபட்டுள்ளது.

இந்திய மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஆகஸ்ட் 2023 இல் வண்டலூர் அடுத்த அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கும் கான்பூர் உயிரியல் பூங்காவிற்கும் இடையே பூங்கா விலங்குகளை பரிமாறிக்கொள்ள முன்மொழியப்பட்டது.

அதன்படி, பத்து அனுமன் குரங்குகள், ஐந்து மர ஆந்தைகள், ஒரு ஜோடி ஹிமாலயன் கிரிஃபோன் கழுகு மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் என மொத்தம் நான்கு இனங்கள் கான்பூர் விலங்கியல் பூங்காவில் இருந்து கொண்டு வரப்பட்டது.

கான்பூரிலிருந்து சென்னைக்கு விலங்குகள் பரிமாற்றம் பயணத்தில் கான்பூர் உயிரியல் பூங்கா பணியாளர்கள், வனச்சரக அலுவலர்கள், கால்நடை உதவி மருத்துவர் மற்றும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால்நடை உதவி மருத்துவர் ஆகியோர் உடன் வந்தனர்.

கொண்டு வரப்பட்ட விலங்குகளின் உடல்நிலை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால்நடை உதவி மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டு விலங்குகளை தனிமைப்படுத்தப்பட்ட தற்காலிக அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.
நிர்ணயிக்கப்பட்ட தனிமைப்படுத்தும் கால அவகாசம் முடிந்ததும், உயிரியல் பூங்காவில் காட்சிப் பகுதிக்கு மாற்றப்படும்.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து கான்பூர் உயிரியல் பூங்காவிற்கு ஒரு ஜோடி கட்ட உடல் மலைப்பாம்புகள், இரண்டு ஜோடி சருகு மான்கள், மூன்று நெருப்புக்கோழிகள், ஒரு ஜோடி பச்சை உடும்புகள் மற்றும் ஒரு ஆண் சாம்பல் ஓநாய் ஆகிய விலங்குகள் அனுப்பப்பட்டதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.