சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2-ல், வழித்தடம்-3 (சோழிங்கநல்லூர் ஏரி முதல் சிப்காட் 2 வரை) மற்றும் வழித்தடம்-5-ல் (கோயம்பேடு மொத்த சந்தை வளாகம் மெட்ரோ முதல் எல்காட் வரை) ஆகிய இரண்டு உயர்மட்ட வழித்தடங்களில் அமையவுள்ள மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு நடைமேடை தடுப்பு கதவுகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் ரூபாய் 159.97 கோடி மதிப்பில் எஸ்டி இன்ஜினியரிங் அர்பன் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் முன்னிலையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் எஸ்டி இன்ஜினியரிங் அர்பன் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராமசாமி முத்துராமன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். வழித்தடம்-3 மற்றும் வழித்தடம்-5-ல் அமையவுள்ள 36 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களில் பாதி உயரத்திலான நடைமேடை தடுப்பு கதவுகள் அமைக்கும் பணிகள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். உயர்மட்ட வழித்தடங்களில் நடைமேடை தடுப்பு கதவுகள் அமைப்பதால் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ இரயில் இயக்கங்களை இந்த அமைப்பு எளிதாக்கும். மேலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்.

இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் துணை ஆலோசகர் ஏ.சங்கரமூர்த்தி (சிக்னலிங் மற்றும் தொலைத்தொடர்பு), சி.முருகமூர்த்தி (குழுத் தலைவர், பொது ஆலோசகர்), உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.