
மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியானது வைகுண்ட ஏகாதசியாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் தான், அர்ஜூனனுக்கு, கிருஷ்ண பகவான் கீதையை உபதேசம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ராவணனால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுவிக்கும்படி, முப்பத்து முக்கோடி தேவர்களும் திருமாலை வணங்கி வேண்டிய தினமும் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியாகும்.
இதனால் இந்த ஏகாதசிக்கு ‘முக்கோடி ஏகாதசி’ என்ற பெயரும் உண்டு. இது தவிர ஏகாதசி விரதமிருந்து தான் குசேலன் பெரிய செல்வந்தன் ஆனான். பாண்டவர் களில் ஒருவரான தர்மராஜா ஏகாதசி விரதத்தால் தான் துன்பங்களில் இருந்து விடுபட்டார். ருக்மாங்கதன் என்ற மன்னர் இதே விரதத்தை மேற்கொண்டுதான் மக்கட்பேறு பெற்றான். வைகானஸ் என்ற அரசன், இந்த விரதத்தின் மூலமாக தங்கள் மூதாதையர்களுக்கு நற்கதி கிடைக்கப் பெற்றான்.