
இந்தியாவில் கடந்த 2022-ஆம் ஆண்டில் 5 முதல் 19 வயதுக்குட்பட்ட 73 லட்சம் சிறுவர்கள் மற்றும் 52 லட்சம் சிறுமிகள் உள்பட சுமார் 1.25 கோடி பள்ளி வயது குழந்தைகள் அதிக எடையுடன் இருப்பதாக ‘தி லான்செட்’ இதழில் வெளியிடப்பட்ட உலகளாவிய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
உலக அளவில் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் வயது வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டியுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளின் உலகளாவிய கூட்டமைப்பான ‘என்சிடி ரிஸ்க்’ மற்றும் உலக சுகாதார மையம் ஆகியவை இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டன. ஆய்வில், உலகம் முழுவதும் 190-க்கும் மேற்பட்ட நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 5 முதல் 19 வயதுடைய 6.3 கோடி இளம் பருவத்தினர் மற்றும் 20 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 15.8 கோடி மக்கள் என்று 22 கோடிக்கும் அதிகமானோரின் எடை மற்றும் உயர அளவீடுகளை (பிஎம்ஐ) 1,500 ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
உடல் பருமன் மற்றும் குறைந்த எடை ஆகிய இரண்டும் ஊட்டச்சத்து குறைபாட்டின் விளைவுகள். பல வழிகளில் மக்களின் ஆரோக்கியத்துக்கு இவ்விரண்டும் தீங்கு விளைவிக்கும். கடந்த 33 ஆண்டுகளில் இந்த 2 வகையான ஊட்டச்சத்து குறைபாடுகளின் உலகளாவிய போக்கு குறித்த விரிவான பார்வையை வழங்கும் இந்த ஆய்வு முடிவுகள் தி லான்செட் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. உடல் பருமன் பாதிப்பு உயர்வு: ஆய்வில், உலக அளவில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே கடந்த 2022-ஆம் ஆண்டில் உடல் பருமன் விகிதம் கடந்த 1990-ஆம் ஆண்டைவிட நான்கு மடங்கு அதிகரித்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டில் 6.5 கோடி சிறுமிகள், 9.4 கோடி சிறுவர்கள் என மொத்தம் 15.9 கோடி பள்ளி வயது குழந்தைகள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.