
மார்கழி மாதம் கோலத்திற்கு உகந்த மாதம். எல்லா நாளும், எல்லா மாதங்களும் கோலம் போடுவோம். ஆனால், மார்கழி என்றால் தனிச் சிறப்பு. இறைவனை தொழுவதற்காக சிறந்த மாதமாக இதை கூறுகிறார்கள்.
அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து கை, கால்களை அசைத்து இடுப்பை வளைத்து வாசல் தெளித்து கோலம் போடும்போது குளிர் போய், வெப்பம் கிடைக்கிறது. அதிகாலை நேரத்தில் நிலவும் இருப்பதால் அதன் குளிர்ச்சியும் கிடைக்கிறது.
வான்வெளியில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தேவர்கள், ரிஷிகளிடமிருந்து ஆற்றல்களும், ஆசிகளும் கிடைக்கும். நல்ல காற்று, ஓசோன் வாயு கிடைக்கிறது. ஒளி வடிவமான இறைவனை வணங்கும்போது ஒளி ஆற்றல் கிடைக்கிறது. கோவிலை வலம் வரும்போது நிலத்தின் ஆற்றல் கிடைக்கிறது.
அக்காலத்தில் அரிசி மாவால்தான் வீட்டின் முற்றத்தில் பலவகை கோலம் போடுவார்கள். கோலங்கள் தீயசக்திகளை வீட்டினுள் வருவதை தடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பித்துருக்கள் வீட்டினுள் வருவதற்கு ஏதுவாகவும், அவர்களிடம் ஆசிபெற ஏதுவாகவும் அமாவாசை, சிரார்த்த தினங்களில் வீட்டில் கோலம் இடாத வழக்கமும் உண்டு.
கோலம் போடுவதால் மனதிற்கு உற்சாகம், நினைவாற்றல் எல்லாம் கிடைக்கிறது. மன ஒருமைப்பாடு இருந்தால்தான் புள்ளிகளை சரியாக இணைத்து கோலம் போட முடியும். நம் மனதை பிரதிபலிப்பதுதான் கோலம்.
மார்கழி மாதம்… இரவில் கோலம் போடுவது சரியா? தவறா?
மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்று கூறுவார்கள். இந்த மாதத்தில் சூரியன் குருவின் வீட்டில் (தனுசு) இருப்பார். இதன் காரணமாக சூரியக் கதிர்கள் பரவுவதற்கு முன் ஒரு தனி சக்தி உண்டாகும்.
இதன் காரணமாகவே அதிகாலையில் எழுந்து கோலமிட வேண்டும். அப்போது பெய்யும் பனிப்பொழிவானது நள்ளிரவில் பெய்யும் பனியைவிட மென்மையானதாக, தாக்கம் குறைந்ததாக, விஷத்தன்மையற்றதாக இருக்கும்.
எனவே, சூரியக்கதிர் பரவுவதற்கு முன்னதாக வாசல் தெளித்து கோலமிடும் போது மார்கழி மாத தட்பவெப்ப நிலைக்கு உடல் ஒத்துப்போகும். பெரிய நோய்கள் ஏற்படாமல் தடுத்துக்கொள்ள முடியும். மாறாக பனிப்பொழிவுக்கு பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால் உடல்நலம் மேம்படாது.
மார்கழி பனியில் மண்ணும் குளிரும், தைப் பனியில் தரையும் குளிரும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே, வாசலில் கோலமிட்டு சாணத்தில் பூசணிப்பூவை வைப்பதன் மூலம் பனியால் ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.சாணத்தின் மீது வைக்கப்படும் பூசணிப்பூ, பரங்கிப்பூ ஆகியவை வெளியேற்றும் வாசனை பனிக்காற்றில் கலந்து, சிறந்த கிருமி நாசினியாகத் திகழும் என்பதால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
எனவே இரவில் கோலமிடுவதை தவிர்க்க வேண்டும். அதிகாலையில் ஓசோன் வாயுக்கள் அதிகம் வெளியேறும். அந்த நேரத்தில் கோலமிடுவதால் சுவாசப் பிரச்சனைகள் தீரும். புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.