பாஜ எம்.பி. வழங்கிய அனுமதி சீட்டில் உள்ளே வந்தவர்கள், மிகப்பெரும் பாதுகாப்பு குறைபாடு என கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்.

புதுடெல்லி: நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினத்தில், 2 நபர்கள் மக்களவைக்குள் நுழைந்து கலர் குண்டுகளை வீசிய விவகாரம் பெரும் பீதியை கிளப்பியது. இதுதொடர்பாக பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மைசூரு பாஜ எம்பி பிரதாப் சிம்ஹாவிடம் பெற்ற பாஸ் மூலம், அந்த 2 நபர்கள் மக்களவைக்குள் பார்வையாளர்களாக வந்து இந்த பயங்கரத்தை நிகழ்த்தி உள்ளனர். இது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு இருப்பதை காட்டுவதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இது வரும் 22ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி, பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தீவிரவாதிகள் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தினர். அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு படையினரும், போலீசாரும் துரிதமாக செயல்பட்டு பதில் தாக்குதல் நடத்தியதால் எம்பிக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சண்டையில் டெல்லி போலீசார், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் என 9 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலின் 22வது நினைவு தினமான நேற்று, உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாடாளுமன்ற வளாகத்தில் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் தலைமையில் நடந்தது. இதில், மக்களவை தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி, பாஜ தேசிய தலைவர் நட்டா, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ஒன்றிய அமைச்சர்கள், அனைத்து கட்சி எம்பிக்கள் பங்கேற்றனர்.

பகீர் சம்பவம்: இதைத் தொடர்ந்து, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை, மாநிலங்களவை கூடியது. பிற்பகல் 1 மணி அளவில் மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, மேற்கு வங்க பாஜ எம்பி காஜன் முர்மு அவையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவையின் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த 2 பேர் எம்பிக்கள் அமர்ந்திருக்கும் அவை அரங்கிற்குள் மேலே இருந்து குதித்தனர். இதனால் அவையில் பதற்றமான சூழல் உருவானது. இரு நபர்களில் ஒருவனை எம்பிக்கள் மடக்கிப் பிடித்தனர். மற்றொருவன், ‘சர்வாதிகாரம் ஒழிக’ என முழக்கப்பட்டபடி, மேஜை மீது தாவிக் குதித்து சபாநாயகர் இருக்கை நோக்கி செல்ல முயன்றான். அடுத்த சில நொடியில் அவனையும் எம்பிக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். அதற்குள் இரு நபர்களும் அவர்கள் வைத்திருந்த வண்ண புகை குண்டுகளை அழுத்தியதால், அவை முழுவதும் மஞ்சள் நிற புகை சூழ்ந்தது. இதனால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. வெளியில் ஆர்ப்பாட்டம்: அந்த சமயத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட எம்பிக்கள் அவையில் இருந்தனர். மத்தியபிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநில முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்றதால் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அவைக்கு வரவில்லை. அவைக்குள் இந்த சம்பவம் நடந்த அதே சமயம், நாடாளுமன்றத்திற்கு வெளியே பெண் உட்பட 2 பேர் ‘சர்வாதிகாரம் ஒழிக’, ‘பாரத் மாதா கி ஜெய்’, ‘ஜெய் பீம், ஜெய் பாரத்’ என முழங்கியபடி சிவப்பு, மஞ்சள் நிற புகை குண்டுகளுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கிருந்த போலீசார் அவர்களை பிடித்து அப்புறப்படுத்தினர்.

பாதுகாப்பு குறித்து ஆய்வு: நாடாளுமன்ற தாக்குதல் தினத்தில், அவையிலும், அவைக்கு வெளியிலும் நடந்த இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த பாதுகாப்பு குளறுபடியை தொடர்ந்து, மக்களவை மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு பின் அவை கூடியதும் பேசிய மக்களவை தலைவர் ஓம்பிர்லா, ‘‘இன்று நடந்த சம்பவம் நம் அனைவருக்கும் கவலையளிக்கும் விஷயம். இது மிகவும் தீவிரமானது. இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். சபையின் பாதுகாப்பு குறித்து விரிவான ஆய்வு செய்யப்படும். நாளை (இன்று) காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுகிறது’’ என தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்கக் கோரி, மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 5 பேர் கைது: மக்களவையில் 5 அடுக்கு பாதுகாப்பை மீறி 2 நபர்கள் மையப் பகுதிக்குள் நுழைந்தது எப்படி? இது எம்பிக்கள் உயிருக்கு பாதுகாப்பில்லாத நிலையை சுட்டிக் காட்டுகிறது என எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது மாபெரும் பாதுகாப்பு குறைபாடு என்று கூறியுள்ள அவர்கள் பல கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பாதுகாப்பு கேள்விக்குறிக்கு யார் பொறுப்பு என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர். அதே சமயம், பிடிபட்ட 4 பேரையும் டெல்லி போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் குடும்பத்தினர், நண்பர்களிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் 2 பேருக்கு தொடர்பிருப்பதாகவும் அதில் ஒரு நபர் குருகிராமில் பிடிபட்டுள்ளதாகவும் மற்றொருவனை தேடி வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ் தந்தது பாஜ எம்பி: நாடாளுமன்றத்தில் பார்வையாளராக உள்ளே செல்வதற்கு யாராவது ஒரு எம்பியின் பரிந்துரை கடிதம் அவசியம். இந்தக் கடிதத்தின் அடிப்படையிலேயே நுழைவுச் சீட்டு வழங்கப்படும். மேலும் அடையாள அட்டைகள் சரிபார்க்கப்பட்ட பிறகுதான் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில், அத்துமீறலில் ஈடுபட்ட இருவருக்கும் விசிட்டர் பாஸ் தந்தது மைசூரு பாஜ எம்பி பிரதாப் சிம்ஹா என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் பாஜ எம்பியின் தொடர்பு குறித்தும் எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி வருகின்றனர்.

  • கைதானது யார், யார்?

நாடாளுமன்றத்தில் நுழைந்து அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் சாகர் சர்மா, மனோரஞ்சன் (35) ஆகியோர் ஆவர். இவர்களில் சாகர் சர்மா உபி லக்னோவை சேர்ந்தவர். இவரது தந்தை சங்கர்லால் சர்மா. மனோரஞ்சன், மைசூருவைச் சேர்ந்தவன். பெங்களூருவில் பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்திதாக கைது செய்யப்பட்ட பெண் நீலம் (42), மற்றொரு நபர் மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரை சேர்ந்த அமோல் ஷிண்டே (25). நீலம், அரியானா மாநிலம் ஹிசாரை சேர்ந்தவர். ஐஏஎஸ் நுழைவுத்தேர்வுக்காக பயிற்சி மையத்தில் பயின்று வருபவர். இவர் ஏற்கனவே விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றதாக அவரது சகோதரர் கூறி உள்ளார். குருகிராமில் பிடிபட்டுள்ளவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் கைதானவர்கள் எந்த அரசியல் கட்சியுடனோ, அமைப்புடனோ தொடர்புடையவர்கள் அல்ல என கூறி உள்ளனர். தனிப்பட்ட முறையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி உள்ளனர்.