பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தினை தென்சென்னை தொகுதி சோழிங்கநல்லூரில் ஆரம்பித்தார். மக்களிடையே அவர் பேசியதாவது, “என்னுடைய முதல் பிரச்சாரத்தை சகோதரி தமிழிசைக்காக தென் சென்னை தொகுதியில் தொடங்குவதை பெருமையாக கருதுகிறேன். அவர் பாரம்பரிய மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருடைய தந்தை குமரி அனந்தன் அவர்கள் மதுவிலக்கிற்காக இன்னும் போராளியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

மருத்துவமனையில் படுத்திருந்த போதும், அன்புமணி பேசுகிறேன் என்று சொன்னதும், அய்யா அந்த மதுவை ஒழியுங்கள் என்று சொன்னதும், என் கண்களில் நீர் கொட்ட ஆரம்பித்துவிட்டது. அந்த அளவுக்கு போராட்ட உணர்வு கொண்டவர், அந்த உணர்விற்காக தான் மருத்துவர் தமிழிசைக்காக பிரச்சாரம் செய்ய வந்துள்ளேன். அவர் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல வேண்டும்.

தமிழக மக்களே நல்லவர்களை தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்புங்கள். ஐந்தாண்டுகளுக்கு முன் திமுக கூட்டணியை சேர்ந்த 38 பேர் அனுப்பினீர்களே! அவர்களால் தமிழகத்திற்கு ஏதேனும் பிரயோஜனம் உண்டா? ஒருமுறை தவறு செய்து விட்டீர்கள் மீண்டும் அந்த தவறை செய்யாதீர்கள்.