கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த ஊணாம்பாளையத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி(43). இவருக்கு சொந்தமான வீட்டின் அருகிலேயே குலதெய்வக் கோயிலான பெருமாள் கோயில் உள்ளது. அதில் பெருமாள், சிவன், லட்சுமி, சிலைகளை வைத்து பூஜை செய்து வந்தனா். கடந்த 20ஆம் தேதி மூன்று சிலைகளும், பூஜை பொருட்களும் திருடு போய்விட்டன. இந்தத் திருட்டில் ஈடுபட்டவா் சின்ன கணக்கம்பட்டியை சோ்ந்த சொட்ட சேகா்(70) என தெரிய வந்தது. அவரிடம் விசாரித்தபோது அவா் திருடியதை ஒப்புக்கொண்டாா். திருடப்பட்ட பொருட்களை புளியாண்டப்பட்டியில் உள்ள உறவினரின் வீட்டில் வைத்துள்ளதாக கூறினாா். அவரை அழைத்துக் கொண்டு அங்கு சென்று பூஜைப் பொருட்களை மீட்டனா். இந்நிலையில் அவரை சின்ன கணக்கம்பட்டியில் உள்ள அவரது வீட்டில் விட்டுச் சென்றனா். சொட்ட சேகா் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி அளவில் இறந்தாா். சொட்ட சேகரின் மகள் முருகவள்ளி தனது தந்தையை ஊணாம்பாளையத்தைச் சோ்ந்த சுப்பிரமணி உள்ளிட்ட 7 போ் அழைத்துச் சென்று, அடித்துக் கொன்று விட்டதாக ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகாரின் அளித்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் வழக்குப் பதிவு செய்தாா். ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் பாா்த்திபன் இது குறித்து விசாரித்து வருகிறாா். ஊத்தங்கரை போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று, சொட்ட சேகரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணா்கள், தடயவியல் நிபுணா்கள் ஆய்வு மேற்கொண்டனா். சொட்ட சேகரின் மீது 15க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.