தமிழ் மாதங்களில் 4வது மாதம் ஆடி மாதம்.. இந்த ஆடி மாதம் புனிதமான மாதமாக கருதப்படுகிறது.. அதற்கு காரணம் இந்த மாதம் முழுவதும் இறைவழிபாடும் ஆன்மீக விழாக்களும் விஷேசங்களும் நிறைந்திருக்கும்..அதில் மிக முக்கியமானது ஆடி அமாவாசை.. ஆடியில் வரும் அமாவாசை தினம் மிகுந்த முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் அமாவாசை வந்தாலும் இந்த ஆடி மாதத்தில் வரும் அமாவாசையே சிறப்பானதாக கருதப்படுகிறது.. ஆடி மாதத்தில் வரும் ஆடி அமாவாசை விரதத்தை கடைபிடிப்பதும் சிறப்பு வாய்ந்தது. காரணம் இந்த ஆடியில்தான் தட்சிணாயன புண்ணிய காலத்தின் துவக்க ஆரம்பிக்கும்.. அப்போது பித்ருலோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்கள் நம்மை பார்ப்பதற்காக பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் மாதமாக இந்த ஆடி மாதம் சொல்லப்படுகிறது. அதனால் ஆடி அமாவாசையில் நாம் கொடுக்கும் தர்ப்பணத்தை நம்முடைய முன்னோர்ளே நேரடியாக ஏற்பதாக ஐதீகம். ஆடி அமாவாசை2024 எப்போது? இந்த வருடம் ஆடி அமாவாசை ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 4ஆம் தேதி, 2024 அன்று வருகிறது.. இந்து நாட்காட்டியில் குறிப்பிடத்தக்க அமாவாசை தினமான ஆடி அமாவாசை அனுசரிக்கப்படும். இந்த புனித நாளின் தொடக்கத்தை குறிக்கும் அமாவாசை திதி, ஆகஸ்ட் 3, 2024 அன்று மாலை 3:50 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 4ஆம் தேதி, 2024 மாலை 04:42 மணிக்கு முடிவடைகிறது. படையல் போடும் நேரம் எது? ஆகஸ்ட் 04ம் தேதி பகல் 12 மணி முதல் 01.30 வரை எமகண்டம் நேரமாகும். அதனால் முன்னோர்களுக்கு இலை போட்டு, படையல் போடும் வழக்கம் உள்ளவர்கள் பகல் 01.30 மணிக்கு பிறகு படையல் போட்டு வழிபடுவது சிறப்பானதாகும். காகத்திற்கு சாதம் வைப்பதும் பகல் 01.30 மணிக்கு பிறகு வைப்பது சிறப்பானதாகும். ஆடி அமாவாசை ஏன் சிறப்பான நாள்? ஆடி அமாவாசை நாளில், அதிகாலையில் எழுந்திருத்தல், சமயச் சடங்குகள், கோவில்களுக்குச் செல்வது, முன்னோர்களுக்கு வழிபாடு செய்வது, தொண்டு செய்வது போன்றவை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் குலதெய்வங்களை வணங்கி வழிபடுவதன் மூலம் முன்னோர்களின் சுமைகளில் இருந்து விடுபடலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆடி அமாவாசையின் போது கடல் அல்லது புண்ணிய நதிகளில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பதும் நம்பிக்கை. இந்த நாளில் முன்னோர்களுக்கு நீர், நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது நல்லதாகும். அப்படி தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் அன்னதானம் செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்குமாம்.. மேலும் ஆடி அமாவாசை தினத்தில் காகத்திற்கு சாதம் வைப்பதும் முன்னோர்களை மகிழ்ச்சியாக்குவதற்கு எளிய வழியாகும்.