சரத்குமாருக்கு கேக் ஊட்டிவிட்ட ராதிகா

நடிகை ராதிகா, தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னதிரையிலும் பல தொடர்களை இயக்கி நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ராதிகா திரைத்துறையில் அறிமுகமாகி 45 ஆண்டுகள் கடந்துள்ளது. இதனை அவர் தன் கணவர் சரத்குமாருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

‘ஜெயிலர்’ படம் குறித்து ட்வீட் செய்த கூகுள்

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை அனைத்து தரப்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படம் குறித்து ட்வீட் செய்துள்ளது கூகுள் இந்தியா நிறுவனம். “தலைவரு நிரந்தரம், ஒரு வழியாக காத்திருப்பு முடிவுக்கு வந்தது” என பதிவிட்டு ‘அண்ணாத்த’ படம் வெளியான தேதியை வெளியிட்டுள்ளது.

மகேஷ் பாபுவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

தெலுங்கு திரையுலகில் டாப் நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவர் ஒரு படத்திற்கு தற்போது ரூ.80 கோடி வரை சம்பளம் வாங்குவதாக திரை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதனிடையே இவருக்கு தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பிரம்மாண்ட வீடு, தியேட்டர் உள்ளிட்ட சொத்துகள் இருக்கிறதாம். இவற்றின் மதிப்பு ஒட்டுமொத்தமாக சுமார் ரூ.256 கோடி என கூறப்படுகிறது.

தோல்வியில் இருந்து ரஜினி மீண்டு வர உதவிய இயக்குநர்கள்

தமிழ் திரைத்துறையில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துவரும் ரஜினி, பல தோல்வி படங்களையும் வழங்கியுள்ளார். அந்த நேரங்களில் அவருக்கு சில இயக்குநர்கள் கைகொடுத்துள்ளனர். அந்த வகையில் இயக்குநர்கள் பாலச்சந்தர், முத்துராமன், மகேந்திரன், சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, ஷங்கர் ஆகியோர் தோல்வியில் இருந்து மீண்டு வர உதவியுள்ளனர். இந்த பட்டியலில் தற்போது நெல்சன் இணைந்துள்ளார்.

கவனம் ஈர்க்கும் ‘வெப்பன்’ பட டீசர்

குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ், வசந்த் ரவி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வெப்பன்’. ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகிவரும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். முன்னதாக இப்படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், தற்போது டீசரை படக்குழு வெளியுள்ளது. ஆயுதங்களால் அழிக்க முடியாத ஒருவரின் கதையாக இப்படம் தயாராகியுள்ளது.

ஓடிடி தளத்தில் வெளியானது ‘மாவீரன்’

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாவீரன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ரீமேக் படங்களில் நடித்தால் என்ன தவறு? – சிரஞ்சீவி

‘வேதாளம்’ படத்தின் ரீமேக்கான ‘போலா சங்கர்’ பட நிகழ்ச்சியில் பேசிய சிரஞ்சீவி, “ஏன் ரீமேக் படங்களிலே தொடர்ந்து நடித்து வருகிறீர்கள் என்று பலர் கேட்கிறார்கள். என்னை பொறுத்தவரை கதை நன்றாக இருக்கும்போது அதை ரீமேக் செய்து ரசிகர்களுக்கு கொடுப்பதில் என்ன தவறு? ஒடிடி வந்த பின் அனைத்து மொழி ரசிகர்களும் அனைத்து மொழிகளிலும் படங்களை பார்க்க முடிகிறது” என்றார்.

‘ஜெயிலர்’ பார்க்க போன தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ‘ஜெயிலர்’ படம் வெளியாகியுள்ள திரையரங்குகளில் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் ஒளிபரப்பப்படுகிறது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.