சென்னை குரோம்பேட்டை ராதாநகர் சுரங்கப்பாதை ஜனவரி 7-ந் தேதி திறக்கப்பட இருக்கிறது.  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த சுரங்கப்பாதையை திறந்து வைக்கிறார்.

ராதா நகர் சுரங்கப்பாதை 17 ஆண்டுக்கு பிறகு பயன்பாட்டுக்கு வந்தாலும் அதில் நீடிக்கும் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும், என்று குடியிருப்போர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் ரயில் நிலையத்திற்கு கிழக்கே 2.5 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் ராதா நகர் ரயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த ரயில்வே கேட்டு அடிக்கடி மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் காலதாமதம் உயிரிழப்பு ஆகியவை காரணமாக சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. குரோம்பேட்டை குடியிருப்போர் சங்க இணைப்பு மையம் உட்பட பல்வேறு அமைப்புகள் வைத்த கோரிக்கைகளால் 2009 ஆம் ஆண்டு ரூபாய் 14.75 கோடி செலவில் இலகு ரக இருவழி வாகன சுரங்கப்பாதை அமைக்கவும் ரயில் நடைமேடைக்கு செல்வதற்கு மற்ற ரயில் நிலையங்களில் உள்ளது போல் படிக்கட்டு அமைக்கவும் திட்டம் தீட்டப்பட்டது. ஆனாலும் பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் தாமதமானது.
இதனை தொடர்ந்து இந்த திட்டத்தை 18 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெறப்பட்டன .

ரெயில்வே நிர்வாகம் இதனை நடைபாதை சுரங்க பாதையாக மாற்றவே முயற்சி செய்து வந்தது. ஆனாலும் குடியிருப்போர் சங்கங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் இருவழி இலகுரக வாகன சுரங்க பாதை அமைக்கப்பட்டது, தற்போது இந்த சுரங்கப்பாதை மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது .

இருந்த போதிலும் இந்த சுரங்கப்பாதையை ஒரு வழி பாதையாக தான் பயன்படுத்த முடியும் என்று நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் திட்டமிட்டபடி இருவழிப் பாதையாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமென்று போலீசாருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் இணைப்புச் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. மேலும் கிழக்குப் பகுதியில் அணுகு சாலையும் எஸ்கலேட்டரும் பொருத்தப்படும், வரை எந்தவித சமரசமும் இல்லாமல் தொடர்ந்து
அதற்கான முயற்சிகளை தொடர்வோம் என்று இணைப்பு மையத்தின் செயலாளர் முருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.