ஐஏஎஸ் பயிற்சி மாணவி

சென்னை தாம்பரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சிவில் சர்வீஸ் பயிற்சி நிறுவனத்தில் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த 22 வயது மாணவி ஒருவர் பயிற்சி பெற்று வருகிறார். இவர் நேற்று மதியம் வகுப்பு முடிந்து பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்றுள்ளார். இந்து மிஷன் மருத்துவமனை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, லுங்கி மற்றும் சட்டை அணிந்துகொண்டு சாதாரணமாக வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென பாய்ந்து வந்து, மாணவி அணிந்திருந்த 7 பவுன் தாலி மற்றும் தங்கச் செயின்களை பறித்துள்ளார்.

திருட்டு சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் விசாரணை

உடனே சுதாரித்துக் கொண்ட அந்த மாணவி, துணிச்சலுடன் அந்த நபரை பிடித்து அடித்து உதைக்க தொடங்கினார். மாணவி எதிர்த்து சண்டையிடுவதை கண்டு பயந்து போன திருடன், ஒருவழியாக மாணவியின் பிடியில் இருந்து நழுவி ஓடினார். அப்போது மாணவி பலமாக கூச்சலிடவே, அதனை கேட்ட பொதுமக்கள் ஓடிவந்து திருடனை பிடிக்க முற்பட்டனர். ஆனால், அதற்குள் அந்த நபர் ரயில் தண்டவாளத்தை சுற்றி அமைந்துள்ள புதர்கள் வழியாக தப்பியோடிவிட்டதாக சொல்லப்படுகிறது. போகும்போது மாணவியிடமிருந்து பறித்த செயின்களை சாலையோரம் வீசிவிட்டுச் சென்றுள்ளார். அந்த நகைகளை மீட்ட பொதுமக்கள், அவற்றை மாணவியிடம் ஒப்படைத்தனர். அதன் மதிப்பு ரூ. 9 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. திருடனை பிடிக்க போராடியதில் மாணவிக்கு கழுத்து மற்றும் கைகளில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் அப்பகுதி மக்கள் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து தாம்பரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.