
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 30-ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்பட்டது. இதுவரை சுமார் 6.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். உற்சவ நிகழ்ச்சிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் பக்தர்கள் கூட்டம் கடந்த 2 நாட்களாகவே அதிகரித்து வருகிறது.

சபரிமலை வழித்தடங்களில் இதுவரை இல்லாத கூட்டம் நேற்று இருந்தது.எரிமேலியில் இருந்து பெருவழிப்பாதை, பம்பை, கணபதி கோயில், மரக்கூட்டம், அப்பாச்சிமேடு, பெரிய நடைப்பந்தல் உள்ளிட்ட பகுதிகளிலும் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. குறிப்பாக சந்நிதானத்தில் இருந்து மரக்கூட்டம் வரை ஒதுங்கக்கூட இடம் இல்லாத நிலையில் நெரிசல் ஏற்பட்டது.