நிர்மலா சீதாராமன் பெயரில் பரவும் போலி வீடியோ!

மத்திய நிதி அமைச்சர் 'நிர்மலா சீதாராமன்' பேசுவது போன்ற தோற்றத்தில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 'மாதம் 22,000 ரூபாய் முதலீடு செய்தால், 15 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்' என சமூக வலைதளங்களில் பரவி வரும் விளம்பரம் போலியானது என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
"மத்திய அமைச்சரோ அல்லது அரசோ இது போன்ற எந்தவொரு முதலீட்டு திட்டத்தையும் அறிவிக்கவில்லை. மக்களை திசைதிருப்பவும், பணத்தை பறிக்கவும் பரப்பப்படும் மோசடி வீடியோ இது" என மத்திய அரசின் பி.ஐ.பி., குழு, விளக்கம் அளித்துள்ளது.
மேலும், பொது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த, பிரபலமானவர்களின் பெயரை பயன்படுத்தி, குறுகிய காலத்தில் பெரும் பணம் ஈட்டலாம் என ஆசை காட்டும் மோசடிகளில் சிக்க வேண்டாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது.
நிபுணர்களின் ஆலோசனைகள்
மிக அதிக லாபம் தரும் திட்டங்கள் என்றாலே கவனமாக இருங்கள்.
செபி, ஆம்பி, ஆர்.பி.ஐ., போன்ற அமைப்புகளின் இணையதளத்தில் தகவலை உறுதிப்படுத்துங்கள்.
சமூக வலைதளங்களில் வரும் சந்தேகம் ஏற்படுத்தும் லிங்குகளை கிளிக் செய்யாதீர்கள்.
வங்கி விவரங்கள், ஓ.டி.பி., ஆதார்/பான் போன்ற தனிப்பட்ட தகவலை தெரியாதவர்களிடம் பகிர வேண்டாம்.
சமூக வலைதள விளம்பரங்களை உடனே நம்பாதீர்கள்.



