தாம்பரம் அதிமுக கவுன்சிலருக்கு அடி உதை

போதை ஆசாமிகளை தட்டிக்கேட்ட அதிமுக மாமன்ற உறுப்பினருக்கு சரமாரி அடி!
பலத்த காயங்களுடன் முகத்தில் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி
தாம்பரம் மாநகராட்சியின் 69-வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினரான ராஜ் என்கிற வாட்டர் ராஜ், மர்ம நபர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் மாநகராட்சி 69-வது வார்டு பகுதியில் வாட்டர் ராஜ் வசித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு, அவரது வீட்டின் அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் சில இளைஞர்கள் போதையில் தகராறில் ஈடுபட்டு, விழாவுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட வாட்டர் ராஜ், அந்த இளைஞர்களை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், இன்று மாலை சமுதாயக்கூடம் அருகே உள்ள வாட்டர் டேங்கில் இருந்து தண்ணீர் கொட்டுவதை பார்த்த வாட்டர் ராஜ், மோட்டாரை நிறுத்துவதற்காக அங்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு இருந்த மூன்று இளைஞர்கள், அவர் உள்ளே சென்று திரும்பி வருவதற்குள் கேட்டை மூடி அவருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
“தம்பி, கதவை திறந்து விடுங்கப்பா... நான் போறேன்” என வாட்டர் ராஜ் கூறிய நிலையில், “இருங்க... திறந்து விடுகிறேன்” எனக் கூறியவர்களில் ஒருவர், பின்னர் அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தனது இருசக்கர வாகனத்தை எடுக்க வாட்டர் ராஜ் முயன்றபோது, அவரை மற்றொரு இளைஞர் பைக்கில் இருந்து கீழே தள்ளியதாகவும், தொடர்ந்து மற்றொரு நபர் அவரை சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
தாக்குதலில் முகத்தில் பலத்த காயமடைந்த வாட்டர் ராஜ், சிகிச்சைக்காக அகரம் பிரதான சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து வாட்டர் ராஜிடம் கேட்டபோது, ஏற்கனவே கோவில் திருவிழாவில் தகராறில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவரும், அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்களும் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும், அவர்கள் போதையில் இருந்ததாகவும் தெரிவித்தார்.
தகவல் அறிந்து, அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், காயமடைந்த வாட்டர் ராஜை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன், மாவட்ட கழகம் சார்பிலும் கண்டனத்தை பதிவு செய்தார்.
இதற்கிடையே, சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
போதையில் இருந்ததாக கூறப்படும் இளைஞர்களை தட்டிக்கேட்ட அதிமுக மாமன்ற உறுப்பினருக்கே சரமாரி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



