நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில், மத்திய அரசின் கொள்கைகள் குறித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விவரித்துக் கொண்டிருக்கிறார். இரண்டு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர், இன்று (ஜனவரி 28) தொடங்கி பிப்ரவரி 13 ஆம் தேதி வரை முதல் கட்டமாக நடக்கவுள்ளது. அதன்பிறகு ஒரு மாத கால இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது கட்டமாக மீண்டும் மார்ச் 9-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
குடியரசு தினத்தன்று பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு நடந்ததால், நாளை (ஜனவரி 29) தேசிய பாதுகாப்புப் படையினர் பாசறைக்குத் திரும்பவுள்ளனர். இதன் காரணமாக நாளை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறாது.
நாளை மறுதினம் (ஜனவரி 30) பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. ஜனவரி 31-ம் தேதி சனிக்கிழமை நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை அலுவல்கள் நடைபெறாது.
இந்த நிலையில், 2026-27-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப். 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது மிக அரிதான நிகழ்வாகும். மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து 9-ஆவது முறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். நாளை (ஜன.29) பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
பிப்ரவரி 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற உள்ளது.
இரண்டாவது கட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர் மார்ச் 9-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 2-ம் தேதி முடிவடைகிறது. பல்வேறு துறைகளின் நிலைக் குழுக்கள், மானியங்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்ய இந்த 1 மாத கால இடைவெளி உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



