கோலாகலமாக தொடங்கிய டி20 உலகக் கோப்பை.. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சு!

கோலாகலமாக தொடங்கிய டி20 உலகக் கோப்பையின் சனிக்கிழமை நடைபெற்றுவரும் தொடக்க ஆட்டத்தில் டாஸ் வென்று பாகிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் இன்று ஆரவாரத்துடன் தொடங்கியது. இந்தியாவும் இலங்கையும் இணைந்து இந்த உலகக்கோப்பையை நடத்துகிறது. இந்தத் தொடரில் மொத்தமாக 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் ஏ-வில் இந்தியா, அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஓமன் ஆகிய அணிகளும், குரூப் சி-யில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஸ்காட்லாந்து, இத்தாலி, நேபாளம் ஆகிய அணிகளும், குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கனடா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
லீக் சுற்றின் முதல் போட்டி இலங்கையில் உள்ள கொழும்பு எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் திடலில் சனிக்கிழமை தொடங்கியது. முதல் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
கொல்கத்தா ஈடன் கார்டனில் மாலை 3 மணிக்கு வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட்லாந்து அணிகளும், மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு இந்தியா - அமெரிக்கா அணிகளும் விளையாட உள்ளன.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகா முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்தார்.
நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவருக்கு 147/9 என்ற கணக்கில் ரன் எடுத்து இருந்தது.



