சேலத்தில் நாளை விஜய் சந்திப்பு...! சரியாக 4998 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரக் கூட்டம் நாளை சேலத்தில் நடைபெறவுள்ளது.
சுமார் ஒன்றரை மாதங்கள் கழித்து மீண்டும் மக்களிடையே அக்கட்சியின் தலைவர் விஜய் பேசுவது குறிப்பிடத்தக்கது. இந்த பிரசாரக் கூட்டத்திற்கு கடந்த டிசம்பர் மாதமே அனுமதி கேட்டு அந்த மாவட்ட செயலாளர் மற்றும் தவெக-வினர் காவல் துறையில் மனு அளித்திருந்தும் சில பாதுகாப்புக் காரணங்களுக்காக கூட்டத்துக்கு காவல் துறை தரப்பில் இருந்து அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் தவெக சார்பில் மீண்டும் காவல்துறை அனுமதி கேட்டு அணுகியது. ஆனால் இம்முறை பொதுமக்கள் சந்திப்புக் கூட்டமாக இல்லாமல் தவெக நிர்வாகிகளுடனான சந்திப்புக் கூட்டமாக நடத்த அனுமதி அளிக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.
இதைப் பரிசிலித்த காவல்துறை சேலம் சீலநாயக்கன்பட்டி தாளமுத்து-நடராஜன் திடலில் பிப்ரவரி 13-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு அனுமதி அளித்தனர். இதையடுத்து, விஜய் கலந்துகொள்ளும் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்துக்கு காவல் துறை தரப்பில் இருந்து விஜய் வேனில் நின்றபடிதான் பேச வேண்டும், தவெக நிர்வாகிகளுக்கு இருக்கைகள் போடக்கூடாது, மொத்தம் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். பங்கேற்கும் அனைவருக்கும் அனுமதி அடையாள அட்டை வழங்க வேண்டும். வயது முதிர்ந்தோர், குழந்தைகள் , கர்ப்பிணிகள், உடல் நலம் குன்றியோருக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட 51 நிபந்தனைகளை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு சான்றாக 4998 பேர் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப் பட்டிருப்பதும், அனுமதி சீட்டு பெறாத நிர்வாகிகளும் பொதுமக்களும் நேரில் வருவதை கண்டிப்பாக தவிர்க்கவும் த.வெ.க. தலைமை கூறியிருக்கிறது. மேலும் ரசிகர்கள் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடி, நேரடியாக தொலைக்காட்சியிலும், சமூக வலைத்தளத்திலும் இந்நிகழ்ச்சியை நேரடியாக காண வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



