
தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதிகளின் ஓட்டு விவரங்களை தற்போது… 234 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பகுத்து வெளிவந்துள்ள செய்தி நம்மை பல ஆச்சரியங்களில் ஆழ்த்துகின்றது.
ஒவ்வொரு மக்களவை தொகுதிக்குள்ளும்… 6 சட்டமன்ற தொகுதிகள் இருப்பதை நாம் அறிவோம். அவை ஒவ்வொன்றிலும் தொகுதி வாரியாக எந்த கட்சி முன்னிலை பெற்றுள்ளனர் என்பதை இனி பார்ப்போம்.
மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில்…
221 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி முதலிடம் பிடித்துள்ளது. வாவ்..! பாராட்டுகள் & வாழ்த்துகள்.
மீதி… 13 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே…
திமுக கூட்டணி இரண்டாம் இடம் பிடித்துள்ளது..!
அடடே…
அப்படின்னா… அந்த 13 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றிய எதிர்க்கட்சிகள் எவை எவை என்று பார்க்க வேண்டும். ஏனெனில்… இந்த 13 தொகுதிகளால்தான்… ஓட்டு எண்ணிக்கையின் போது சில மக்களவை தொகுதிகளில் மட்டும்… கடும் போட்டியும் இழுபறியும் நிலவியது.
அந்த 13ல்… 8 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக முதலிடம் பிடித்துள்ளது..!
அவை… எந்த கட்சி வென்ற மக்களவை தொகுதிக்குள் வருகின்றன என முதலில் பார்ப்போம்.
- எடப்பாடி (திமுக வென்ற சேலம்)
- குமாரபாளையம் (திமுக வென்ற ஈரோடு)
- சங்ககிரி (கொமதேக வென்ற நாமக்கல்)
- பரமத்திவேலூர் (கொமதேக வென்ற நாமக்கல்)
- அரியலூர் (விசிக வென்ற சிதம்பரம்)
- ஜெயங்கொண்டம் (விசிக வென்ற சிதம்பரம்)
- திருக்கோவிலூர் (விசிக வென்ற விழுப்புரம்)
- உளுந்தூர்பேட்டை (விசிக வென்ற விழுப்புரம்)
அந்த 13ல் மேற்படி அதிமுகவின் 8 போக மீதியுள்ள 5ல்…
3 சட்டமன்ற தொகுதிகளில் பாமக முதலிடம் பெற்றுள்ளது.
- தருமபுரி
- பெண்ணாகரம்
- பாப்பிரெட்டிபட்டி
மேற்படி 3 சட்டமன்ற தொகுதிகளும்… திமுக வென்ற தருமபுரி மக்களவை தொகுதிக்குள் வருவதால்… ஓட்டு எண்ணிக்கையின் போது கடும் இழுபறி நிலவியதை நாம் அறிவோம்.
ஆக, அந்த 13ல் மேற்படி அதிமுகவின் 8 மற்றும் பாமகவின் 3 போக மீதியுள்ள 2 சட்ட மன்ற தொகுதிகளில் தேமுதிக முதலிடம் பிடித்துள்ளது. ஆம். நீங்கள் நினைத்தது சரி. கடும் இழுபறி நிலவியபின்… காங்கிரஸ் வென்ற விருதுநகர் மக்களவை தொகுதியில்தான் அவை இரண்டும் வருகின்றன.
- திருமங்கலம்,
- அருப்புக்கோட்டை
பிரஸ் மீட்களில் மிகுந்த வீராவேசம் பேசும்… பாஜக, தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு சட்டமன்ற தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை. அதுமட்டுமின்றி.. பாஜகவின் 4 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளான…கோவை(தெற்கு), நாகர்கோயில், திருநெல்வேலி மற்றும் மொடக்குறிச்சி உள்பட, பாஜக போட்டியிட்ட எந்தத்தொகுதியிலும் அக்கட்சி முதலிடம் வரவில்லை… என்பதுதான் இங்கே குறிப்பிடத்தக்கது.