
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் பதவிக்கு தன்னை பரிந்துரைக்கும்படி, மாவட்ட செயலர் மதுரா செந்திலிடம், குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜயகண்ணன் வலியுறுத்தி இருக்கிறார். ஆனால், மதுரா செந்தில், தன் உறவினருக்கு அப்பதவி கிடைக்க செய்துள்ளார். பின், குமாரபாளையம் நகர நிர்வாகத்தை இரண்டாக பிரித்து, தனக்கு நகர செயலர் பதவி தரும்படி, விஜயக்கண்ணன் கேட்டுள்ளார். அதற்கும் மாவட்ட செயலர் தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது.
அதிருப்தி அடைந்த விஜயகண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட, ஏழு கவுன்சிலர்கள், விரைவில் பழனிசாமி முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைய முடிவு செய்துள்ளனர்.இத்தகவல் தி.மு.க., மேலிடத்திற்கு தெரியவந்ததும், அறிவாலயத்தில் பஞ்சாயத்துக்கு நடத்தி, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை.இதற்கிடையில், அதே மாவட்டத்தைச் சேர்ந்த, ஆலாம்பாளையம் பேரூராட்சி தி.மு.க., கவுன்சிலர்கள் சிலரும், மாவட்ட செயலர் மீது அதிருப்தி அடைந்து, அ.தி.மு.க.,வில் இணைய தயாராகி உள்ள தகவலும் வெளியாகி உள்ளது.