இந்த பட்டியலில் தற்போது தேமுதிகவின் பொதுச்செயலாளரக அறிவிக்கப்பட்டுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக அதனைத் தொடர்ந்து உருவான, உருவாகிக் கொண்டிருக்கும் கட்சிகளில் பொதுச் செயலாளர் பதவி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கட்சிகளின் தலைவருக்கு இணையான அதிகாரம் கொண்ட பதவியாக கருத படுகிறது.
அதிமுகவில் எம்ஜிஆர் காலத்தில் அரசியலுக்கு அழைத்துவரப்பட்ட ஜெயலலிதாவுக்கு அவரது காலத்தில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி தரப்பட்டது. எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் ஜானகி அம்மையார் சில மாதங்கள் அதிமுகவின் ஒரு அணிக்கு தலைவராக இருந்தார். ஆனால் அதிமுக அணிகள் ஒன்றிணைக்கப்பட்ட நிலையில் நிரந்தர பொதுச்செயலாளராக இருந்தவர் மறைந்த முன்னாள் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைந்த பின்னரும் கூட அதிமுகவின் ‘நிரந்தர’ பொதுச்செயலாளர் ஜெயலலிதாவே என்ற ஒரு தீர்மானமும் விதியும் அதிமுகவில் இருந்தது. பின்னர் நீக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் சசிகலா சிறைக்குப் போன நிலையில் அதிமுகவில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களின் போது சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.
திமுகவில் பொதுச்செயலாளர் பதவியில் பேராசிரியர் அன்பழகனுக்கு அடுத்ததாக தற்போது துரைமுருகன் இருந்து வருகிறார். திமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவிகளில் ஒன்று பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மறைந்த சற்குண பாண்டியன் திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்தார். அதேபோல திமுகவில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன், திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்தார். தற்போது கனிமொழி கருணாநிதி எம்பி, திமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.
இதேபோல நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் மாநில மகளிரணி செயலாளராக இருந்த நடிகை ராதிகா சரத்குமார், மாநில முதன்மை துணைப் பொதுச்செயலாளர் பதவி வகிக்கிறார். நாம் தமிழர் கட்சியில் சீமான் மனைவி கயல்விழி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தேமுதிகவின் பொதுச் செயலாலராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த், பொதுச்செயலாளர் பதவி வகித்து வந்தார். அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் அவரது மனைவி பிரேமலதா, தற்போது தேமுதிகபொதுச்செயலாளராக்கப்பட்டுள்ளார்.