
கன மழை புயலின் போது சில நாட்களுக்கு முன்பு 7 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று பெருங்களத்தூர் நெடுங்குன்றம் பகுதியில் சாலையை கடந்து சென்றது. இது தொடர்பான வீடியோக்கள் வெளியான நிலையில் தற்சமயம் முதலை சதானந்தபுரம் ஆலப்பபாக்கம் ஜி கே எம் கல்லூரி செல்லும் சாலையில் பொதுமக்கள் பார்த்தனர்.
உடனடியாக தாம்பரம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 10 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தாம்பரம் பீர்க்கன்கரணை காவலர்கள் உதவியுடன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து முதலையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பெருங்களத்தூர் ஆலப்பாக்கம் செல்லும் சாலையில் முழுமையாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீவிர முயற்சியில் முதலை பிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் வாகனத்தில் ஏற்றி கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள முதலை பண்ணைக்கு கொண்டு சென்றனர்.
இந்த பகுதியில் அடிக்கடி முதலைகள் தென்படுவதும் வனத்துறையினரால் பிடிக்கப்படுவதும் இப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெடுங்குன்ற பகுதியில் உள்ள ஏரிகளில் ஏற்கனவே 5க்கும் மேற்பட்ட முதலைகள் இருக்கிறது என துணி துவைக்கவும் ஆடு மேய்க்கவும் சென்ற நபர்கள் கூறிய நிலையில் இதுவரையில் தொடர்ந்து முதலைகள் பிடிக்கப்பட்டு வருகிறது.
மழை நேரங்களில் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டும் போது அல்லது வெயில் காலங்களில் முழுமையாக நீர் வற்றிய நிலையிலும் இந்த முதலைகள் வெளிப்படுவதால் அந்த சமயங்களில் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு அனைத்து முதலைகளையும் பிடித்து இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.