
சென்னை : அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், வீடு விற்பனைக்கான முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் குறைப்பு, இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், வீடு விற்பனையின் போது, நிலத்தின் பிரிபடாத பங்கான, யு.டி.எஸ்., அளவையும், மதிப்பையும் குறிப்பிட்டு, கிரைய பத்திரம் பதிவு செய்யப்படும். இதற்கு, முத்திரைத்தீர்வை 7 சதவீதம், பதிவு கட்டணம் 2 சதவீதம் வசூலிக்கப்படும்.
அதன் தொடர்ச்சியாக, கட்டுமான ஒப்பந்தம் தனியாக பதிவு செய்யப்படும். இரு வகையான பத்திரங்கள் பதிவு செய்யும் நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, நிலத்தின் பிரிபடாத பங்கு, கட்டடத்தின் அளவு, மதிப்பு குறிப்பிடப்பட்டு, ஒரே பத்திரம் பதிவு செய்யும் புதிய நடைமுறை, இன்று அமலுக்கு வருகிறது என, பதிவுத் துறை அறிவித்துள்ளது.
இதன்படி பதிவாகும் பத்திரங்களுக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 50 லட்சம் ரூபாய் வரையிலான வீடுகளின் பத்திரங்களுக்கு, 4 சதவீதம் முத்திரை தீர்வை, 2 சதவீதம் பதிவு கட்டணம் செலுத்தினால் போதும்.
இதேபோன்று, 3 கோடி ரூபாய் வரை மதிப்புள்ள வீடுகளின் பத்திரங்களுக்கு, 5 சதவீதம் முத்திரை தீர்வை, 2 சதவீதம் பதிவு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், இன்று முதல் இது அமலுக்கு வருகிறது என்றும் பதிவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.