
தமிழகத்திலேயே முதல் முறையாக ஊராட்சி பகுதியில் இருப்பவர்கள் கொடுப்பதை இல்லாதவர்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் அன்புக்குடில் எனும் உதவும் கரங்களின் சேவை மையம் திமுக படூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே இன்று திறந்து வைக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சி சென்னையை அடுத்து வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது இங்கே பல அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில் துறை நிறுவனங்கள் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பு வாசிகளும் பொதுமக்களும் தங்களுக்கு தேவை போக மீதமுள்ள பொருட்களை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவும் வகையில் படூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அன்பு குடில் எனும் உதவும் கரங்களின் சேவை மைய திறப்பு விழா இன்று திமுக படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர், மற்றும் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை நிறுவனர் சுதாகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் தங்களுக்கு தேவை இல்லாத புத்தகங்கள் உணவு பொருட்கள் துணிமணிகள் ஆகியவற்றை யாருக்கு கொடுப்பது எங்கு சென்று கொடுப்பது என தெரியாமல் வீணடித்து வருகின்றனர். இதனை போக்கும் வகையில் தங்களுக்கு தேவைப்படாத பொருட்களை இந்த மையத்தில் சென்று வைத்து விட்டால் தேவைப்படுவோர் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் எனும் நோக்கில் இந்த மையம் திறந்து வைக்கப்பட்டது.
மேலும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் தங்களுக்கு தேவையான நாப்கின் ஒரு ரூபாய் நாணயம் செலுத்தினால் பெற்றுக் கொள்ளும் வகையில் நாப்கின் இயந்திரமும் திறந்து வைக்கப்பட்டது.
இந்த மையத்தினை ஊர் பொதுமக்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.