
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 25 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் (28.11.2023) காலை 10 மணி முதல் 200 கன அடியாக உபரிநீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று (29.11.2023) காலை 9 மணி முதல் ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரிநீர் மேலும் அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 1,000 கன அடி நீர் எனவும், அதன் பிறகு 2500 கன அடி நீர் எனவும் திறக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் வினாடிக்கு 2,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், இன்று (30.11.2023) காலை 8 மணி முதல் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, காவனூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அடையாறு கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக செம்பரம்பாக்கம், குன்றத்தூரில் தலா 8.3 செ.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.