திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (அக். 4) தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று (அக். 2) கோயிலில் கொடிக்கம்பத்தில் கருடன் சின்னம் பொறித்த கொடியை ஏற்றுவதற்கான புனித தர்ப்பை மற்றும் புனித கொடியேற்றும் கயிறு போன்றவற்றை தேவஸ்தான ஊழியர்கள் மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று கோயில் அர்ச்சகர்களிடம் ஒப்படைத்தனர். இவை பாதுகாப்பாக ரங்கநாயக மண்டபத்தில் பெரியசேஷ வாகனத்தில் வைக்கப்பட்டுள்ளன.
பிரம்மோற்சவ விழாவை யொட்டி, திருப்பதி மற்றும் திருமலையில் வண்ண விளக்குகள், தோரணங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இவை கண் கவரும் விதத்தில் உள்ளதாக பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திருப்பதியில் முக்கிய இடங்களான பேருந்து நிலையம், ரயில்நிலையம், தேவஸ்தான நிர்வாகஅலுவலகம் உட்பட முக்கிய கூட்டுச்சாலைகளிலும், திருச்சானூர்-திருப்பதி சாலை, சித்தூர்-திருப்பதி சாலைகளிலும் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.