குஜராத்: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் திருமணம் ரூ.1,000 கோடி செலவில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இன்று முதல் 3 நாட்கள் நடைபெறும் இந்த திருமணத்திற்கு முந்தைய விழாவில் 2500 வகை உணவுடன் தடபுட விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் உலக பணக்காரருமான முகேஷ் அம்பானி,நீட்டா அம்பானியின் 2வது மகன் ஆனந்த் அம்பானி இவருக்கும் என் கோர் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி மகள் ராதிகா மெர்சென்ட்டிற்கும் வருகிற ஜூலை 12ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.
திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் 3 நாட்களுக்கு கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குஜராத் மாநிலம் ஜாம் நகரில் நடைபெறும் விழாவை ஒட்டி அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 51 ஆயிரம் பேருக்கு அம்பானி குடும்பம் விருந்தளித்தது. விருந்தில் பங்கேற்றவர்களுக்கு மணமக்கள் மற்றும் அம்பானி குடும்பத்தினர் அனைவரும் இன்முகத்துடன் உணவு பரிமாறினர். திருமணத்திற்கு முந்தைய விழாவில் விருந்தினர்களுக்கு பரிமாற தாய்லாந்து, ஜப்பான், மெக்ஸிகன் மற்றும் பர்சி போன்ற உணவு வகைகளுடன் 2500க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன.
விருந்து நிகழ்ச்சிக்காக சிறந்த சமையல் கலைஞர்கள் 65 பேர் தலைமையிலான குழுவினர் ஜாம் நகரில் முகாமிட்டுள்ளனர். இவர்களில் 20 பெண் சமையல் கலைஞர்கள் உள்ளனர். சமையல் செய்வதற்கான பாத்திரங்கள் மளிகை பொருட்கள் உள்ளிட்டவை 4 லாரிகளில் கொண்டுவரப்பட்டது. ஒரு நாள் விருந்தில் இடம் பெரும் உணவு வகைகள் மீண்டும் மறுநாள் உணவு மெனுவில் இடம் பெறாத வகையில் பார்த்து பார்த்து உணவு பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. காலை உணவுக்கு 75 வகையான உணவுகளும் மதியத்திற்கு 225 வகை உணவுகளும் இரவு விருந்தில் 275 வகை உணவு வகைகளும் இடம் பெறுகின்றன.
திருமண கொண்டாட நாட்களில் நள்ளிரவில் 85 வகையான நொறுக்கு தீனிகள் உள்ளிட்ட உணவுகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனந் அம்பானி, ராதிகா மெர்ச்செண்ட்டின் திருமணத்திற்கு முந்தைய வைபவத்தில் 5 முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதில் 1000 விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பில்கேட்ஸ், ஹிலரி கிளிண்டன், மார்க் ஷாகார்பக், சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். முக்கிய அரசியல் பிரமுகர்கள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு தரப்பட்டுள்ளது.
இதில் ரிஹானா மற்றும் திஹ்ஷாந்த் தோஷாந்த் ஆகியோரின் இசை கச்சேரியும் நடைபெறவுள்ளது. இதில் இடம் பெரும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் விருந்தினர்கள் அணிந்து வர ஒவ்வொரு வகையான உடைகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. திருமணத்துக்கு முந்தைய விழா மற்றும் ஜூலை மாதம் நடைபெறும் திருமண விழா ரூ.1000 கோடி செலவில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இது 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு தனது சொத்தில் ஒரு சதவீதம் மட்டுமே செலவு செய்ய இருக்கிறார். இந்த தகவல் பலரையும் ஆச்சர்ய பட வைத்துள்ளது.