இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி, விண்ணில் செயற்கைக்கோள் தொழில் ரீதியாக கிடைக்கும் வருவாய் மற்றும் வருங்கால வளர்ச்சியை நிர்ணயிப்பதில் தமிழ்நாடு முதன்மையான இடத்தில் உள்ளது.
தனியார் நிறுவனங்கள் சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு தமிழ்நாட்டில் குலசேகரப்பட்டினத்தில் புதிய விண்வெளித் தளத்தை (Spaceport) அமைப்பது குறித்து கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில்திமுக எம்பி கதிர் ஆனந்த் ஒரு முக்கியமான கேள்வி எழுப்பியிருந்தார். அதில் இந்தியாவில்
தனியார் நிறுவனங்கள் சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் சுற்றுப்பாதையில் செலுத்துவதற்குப் பயன்படும் வகையில், தமிழ்நாட்டில் குலசேகரப்பட்டினத்தில் புதிய விண்வெளித் தளத்தை உருவாக்க ஒன்றிய அரசு முடிவு செய்திருக்கிறதா?
ஆம் எனில், அதன் விவரம்? விண்வெளி நிலையம் நிறுவுவதற்கான கால அவகாசம் என்ன?
உலகளாவிய சிறிய செயற்கைக்கோள் சந்தை மதிப்பு 2030 ஆம் ஆண்டளவில் 14 பில்லியன் அமெரிக்க டாலரை (அதாவது ஒரு இலட்சத்து 16 ஆயிரத்து 089 கோடியே 40 இலட்சம் ரூபாய்) எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது உண்மையா? ஆம் எனில், அதன் விவரங்கள் மற்றும் உலகளாவிய சிறிய செயற்கைக்கோள் சந்தையின் பெரும்பகுதியை பெறுவதற்கு ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
இக்கேள்விக்கு
ஒன்றிய அரசின் விண்வெளித் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்து பூர்வமாக அளித்த பதில் விவரம்
ஆமாம். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட சிறிய செயற்கைக்கோள் விண்ணில் (எஸ்.எஸ்.எல்.வி) ஏவுவதற்காக, தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் புதிய விண்வெளி நிலையம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் மற்றும் பாதுகாப்பு வரம்பு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, அரசு சாரா நிறுவனங்களால் (NGES) ஏவுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான (ஸ்பேஸ் போர்ட்) விண்வெளி நிலையம் அமையவுள்ளது
தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகாறும் அடையாளம் காணப்பட்ட 2350 ஏக்கர் நிலத்தில் 2000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்ததும் புதிய தளத்தில் ஏவுதளம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்கால கணிப்புகள் உட்பட உலகளாவிய சிறிய செயற்கைக்கோள் சந்தையின் சரியான அளவு, ஒரு சிக்கலான, மிகவும் விவாதத்திற்குரிய விஷயமாகும் என்றாலும் பல உலகளாவிய ஆலோசனை நிறுவனங்கள் பல்வேறு நிலைப்பாடுகள் வெவ்வேறு அனுமானங்கள் அடிப்படையில் எதிர்காலத்தில் எவ்வளவு வருவாய் ஈட்டும் என்பதைக் கணிக்கின்றன.
சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுதல் மூலமாக வரும் வருவாய் வரும் ஆண்டுகளில் வெகுவாக அதிகரிக்கும் எனத் தெரிகிறது என்று பொத்தாம் பொதுவாக பதில் கூறியிருந்தாலும் இதன் மூலம் நம் நாட்டின் வருவாய் இலட்சம் கோடிக்கு மேல் வரும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
உலகளாவிய சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் சந்தையைப் பொறுத்தவரை ஒன்றிய அரசு பல்வேறு முன்னேற்றங்களைத் தொடங்கியுள்ளது. சிறிய செயற்கைக்கோள் பயணத்தை செயல்படுத்தும் இந்திய மினி பஸ் (IMS) மற்றும் இந்திய நானோ செயற்கைக்கோள் (INS) பஸ்களை ISRO வெற்றிகரமாக நிரூபித்துள்ளது IMS-1 பஸ் தொழில்நுட்பம் NSIL வழியாக இந்திய தொழில்களுக்கு மாற்றப்பட்டது.
மேலும், செலவு குறைந்த மற்றும் தேவைக்கேற்ப சிறிய செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுவதற்கான தேவையைப் பூர்த்தி செய்ய சிறிய செயற்கைக்கோள் ஏவுகணை வாகனத்தையும் (SSLV) இஸ்ரோ உருவாக்கியுள்ளது.
IN-SPACE சமீபத்தில் இந்திய தொழில்களுக்கான சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனத்தின் (SSLV) தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. இவ்வாறு அமைச்சர் தனது பதிலில் கூறினார்.
இதற்கு தான் இன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.