தமிழக அரசின் பல்வேறு துறைகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 4 சதவீத இட ஒதுக்கீட்டில், ஒரு சதவீதம் பார்வையற்றவர்களுக்கு ஒதுக்க வேண்டும். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்றவர்களுக்கு உடனடியாக ஆசிரியர்கள் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் திடீரென திரண்ட பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டடனர்.
இதனால் குரோம்பேட்டையில் இருந்து பல்லாவரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து குரோம்பேட்டை பல்லாவரம் தாம்பரம் காவல் நிலையத்திலிருந்து 40-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கயிறு கட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் காவல்துறைக்கு எதிராகவும் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் கோஷங்கள் எழுப்பியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் நெரிசல் ஏற்பட்டது.
மேலும் முதலமைச்சரை சந்தித்து எங்கள் கோரிக்கைகளை தெரியப்படுத்தி அதை தீர்க்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் எனவும் எங்களை அப்புறப்படுத்தும் காவல்துறையினரையும் அதிகாலை வேலையில் வீட்டிற்கும் தங்கும் விடுதிக்கும் வந்து எங்களை கைது செய்யும் நடவடிக்கைகள் ஈடுபடுபவர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம் என கோஷங்களை எழுப்பினார்கள்.