திருவனந்தபுரம்:
வரப்போகும் வெயிலை நினைத்து கதிகலங்கி கொண்டிருக்கிறது கேரளா மாநிலம்.. மற்றொருபக்கம் தமிழகத்தில் வெயில் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.
வழக்கமாக, ஏப்ரல், மே மாதங்கள், கேரளா மாநிலத்தில் கோடை காலமாகும்… இந்த மாதங்களில் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அங்கு காணப்படும்.. இந்த காலத்தில் கோடை மழையும் பெய்யும் என்பதால் வெப்ப நிலை ஓரளவு தணிந்தும்விடும்.
ஆனால் இந்த வருடம் அப்படியில்லை.. கடந்த பிப்ரவரி ஆரம்பிக்கும்போதே, கேரளா முழுவதும் வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது.. முக்கியமாக, திருவனந்தபுரம், கோட்டயம், ஆலப்புழா, கோழிக்கோடு, கண்ணூர், பாலக்காடு, புனலுார் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் 37 டிகிரி செல்சியஸ் (98.6 பாரன்ஹீட்) வெப்பநிலை சுட்டெரித்து வருகிறது..
பாலக்காடு : இதில், பாலக்காடு, புனலூர் உள்ளிட்ட சில இடங்களில், சில நாட்களுக்கு மட்டுமே அதிகபட்ச வெப்பநிலை இருக்கும். ஆனால் இந்த வருடம் ஆரம்பமே அதிரடியாகிவிட்டது. அதுவும், நேற்று முன்தினம் கண்ணூர் ஏர்போர்ட்டில் அதிகபட்சமாக 37.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருக்கிறதாம்.. கடந்த காலங்களை ஒப்பிட்டால், இப்போதைக்கு 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக உள்ளது…
இப்படிப்பட்ட சூழலில், திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, வழக்கத்தை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது, அம்மாவட்ட மக்களுக்கு கலக்கத்தை தந்து வருகிறது..
வேண்டுகோள் : அத்துடன், காலை 11:00 முதல் மதியம் 3:00 மணி வரை நேரடியாக உடலில் வெயில் படும் வகையில் நடமாட வேண்டாம் என்றும் கேரளா சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தாகம் எடுக்கிறதோ இல்லையோ, அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, வரும் நாட்களில் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அதற்கு மேல் மக்களை கிலியில் ஆழ்த்தி வருகிறது.
தமிழகத்தில் வெயில்: நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, வெயில் அதிகரித்தே காணப்படும் என்று சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. நேற்றைய தினமும் இதுகுறித்து வானிலை மையம் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதில், பிப்ரவரி 19 மற்றும் 20ம் தேதிகளில், தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது.
வறண்ட வானிலை: உள்தமிழகத்தில், ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும், இன்று 20.02.2024 முதல் 23.02.2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், 24.02.2024 அன்று கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.