இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சசிகலா, அவருடைய அண்ணி இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் அங்குள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டன. இதனிடையே சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளிகளின் தண்டனை காலம் நிறைவுற்ற நிலையில், பொருட்களை ஏலம் விடுமாறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் நகைகளை ஏலம் விடுவதற்கு பதிலாக தமிழக அரசிடம் ஒப்படைக்கலாம் என்று பெங்களூரு நீதிமன்றம் தெரிவித்தது. அந்த வகையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தங்கம், வெள்ளி நகைகளை மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் தமிழக உள்துறை செயலாளர் நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்ளலாம் என்று பெங்களூரு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி பெங்களூருவில் இருந்து 28 கிலோ தங்கம், வைர நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள் மொத்தமாக 6 பெட்டகங்களில் தமிழகத்திற்கு கொண்டுவரப்படுகிறது. இதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது தமிழகம் வரவிருக்கும் ஜெயலலிதா நகைகளின் மதிப்பு பல கோடிகள் வரை இருக்கும். இந்த வழக்கில், வழக்கு கட்டணமாக ரூ. 5 கோடியை கர்நாடகாவுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.”