12வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத் தமிழ்ப்போராயத்தின் சார்பில் உலக மொழிகளில் தமிழின் தாக்கம் என்னும் தலைப்பில் மே 2025 ஆம் ஆண்டு நடைபெறுவதை பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் பொறுப்பாளர்கள் முன்னிலையில் எஸ்.ஆர்.எம் நிறுவன வேந்தர் இரா.பாரிவேந்தர் அறிவித்தார். இம்மாநாட்டுக்கான முதல் ஆலோசனைகள் கூட்டம் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவன வளாகத்தில் எஸ்.ஆர்.எம் நிறுவன பதிவாளர் முனைவர் சு.பொன்னுசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்றவர்களைத் தமிழ்ப்பேராயத் தலைவர் கரு.நாகராசன் அவர்கள் வரவேற்றுப் பேசினார். இரண்டு அமைப்புகளுக்குமுள்ள பொறுப்புகளைப் பற்றி வளாக நிர்வாகி இரா. அருணாச்சலம் விளக்கிக் கூறினார். ஆலோசனை கூட்டத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சிமன்றப் பொறுப்பாளர்களான பேராசிரியர்கள் இராம குருநாதன், பாரதிபாலன், அருட்செல்வன், அபிதா சபாபதி, நந்தன் மாசிலாமணி, சுப்பையா மற்றும் கவிஞர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.