
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையைப் பின்பற்ற தேர்தல் ஆணையத்துக்கு சுமார் 30 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையைப் பின்பற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என்பது, ஒரு கட்டுப்பாட்டு மையம், ஒரு வாக்களிக்கும் இயந்திரம் மற்றும் வாக்களித்ததை உறுதி செய்யும் இயந்திரம் ஆகியவற்றைக் கொண்டதாகும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை செயல்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு 30 லட்சம் கட்டுப்பாட்டு அமைப்பு, 43 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரம், 32 லட்சம் விவபேட் அமைப்பும் தேவை. அப்படியென்றால் தற்போது 35 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றாக்குறையாக இருக்கிறது. இவற்றை வாங்குவதோடு, பாதுகாப்பாக எடுத்து வைக்க கிடங்குகளும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயா்நிலைக் குழுவை மத்திய அரசு கடந்த 2-ஆம் தேதி அமைத்தது.
இக்குழுவின் உறுப்பினா்களாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, மாநிலங்களவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 7 போ் அறிவிக்கப்பட்டனா். ஆனால், குழுவில் அங்கம்வகிக்க அதீா் ரஞ்சன் செளதரி மறுத்துவிட்டாா்.
இந்த நிலையில், உயா்நிலைக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் அண்மையில் நடைபெற்றது. அதில், ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ நடைமுறை தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடமிருந்து கருத்துகளைக் கேட்க முடிவு செய்யப்பட்டு, அதுதொடா்பான கடிதத்தையும் அரசியல் கட்சிகளுக்கு உயா்நிலைக் குழு அண்மையில் அனுப்பியது.
அந்தக் கடிதத்தில், ஆலோசனைக் கூட்டத்துக்கான உத்தேச தேதிகளை தெரிவிக்குமாறு அரசியல் கட்சிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும், எழுத்துபூா்வ கருத்துகளை 3 மாதங்களில் தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.