11 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தான் அணி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் விளையாடவுள்ளது. நாளை திங்கள்கிழமை ஆப்கானிஸ்தான் அணியை சென்னையில் எதிர்கொள்கிறது பாகிஸ்தான். இதன்பின் வரும் 27ம் தேதி தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்தும் சென்னையில் விளையாடவுள்ளது பாகிஸ்தான். இதற்காக ஒருவாரம் சென்னையில் தங்கவுள்ள பாகிஸ்தான் வீரர்கள் சென்னை விமான நிலையம் வந்தனர். விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாகிஸ்தான் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு…: கடைசியாக 2012ல் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி சென்னையில் விளையாடியது. அதன்பிறகு 11 ஆண்டுகள் கழித்து தற்போது உலகக் கோப்பை போட்டியில் விளையாடவுள்ளது. சென்னை வந்த பாகிஸ்தான் வீரர்களை, குறிப்பாக பாபர் அஸம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் விமான நிலையத்தில் இருந்து வெளியேவரும் போது சென்னை ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி அவர்களை வரவேற்றனர்.