தெலங்கானா சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்தை முலுகு நகரில் காங்கிரஸ் எம்.பி ராகுல், கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். இதையொட்டி, விஜயபேரி யாத்திரை என்ற பஸ் பிரசார பயணத்தை தொடங்கி வைத்தனர். வழி நெடுக கூடியிருந்த மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
பின்னர், முலுகுவில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், பாஜ, பிஆர்எஸ், மஜ்லிஸ் கட்சிகள் ஒன்றிணைந்து காங்கிரசை தோற்கடிக்க முயற்சிக்கின்றன’ என்று குற்றம்சாட்டினர். பிரியங்கா காந்தி பேசுகையில், ‘தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்படும். எஸ்சி மற்றும் எஸ்டி குடும்பங்களுக்கு தலா ரூ.12 லட்சம் உதவி வழங்கப்படும். இடஒதுக்கீட்டில் எஸ்சி பிரிவினருக்கு 18 சதவீதமாகவும், எஸ்டி பிரிவினருக்கு 12 சதவீதமாகவும் உயர்த்தப்படும். ஒவ்வொரு ஆதிவாசி கிராம பஞ்சாயத்துக்கும் ரூ.25 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும். ஒரு ஆண்டிற்குள் 2 லட்சம் காலி வேலையிடங்கள் நிரப்பப்படும். வேலை இல்லாதவர்களுக்கு மாதாந்திர உதவி தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்’ என்று வாக்குறுதி அளித்தார்.