அதிகாரிகளின் அலட்சியத்தால் பல்லாவரத்தில் மழைநீர் வடிகால்வாயில் விழந்த வயதான பெண்ணுக்கு மார்பு, கையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் பணியை மேற்கொண்டதால் விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சென்னை பல்லாவரத்தில் இருந்து பம்மல் செல்லும் மெயின் ரோடு பஜனை கோயில் தெரு கண்டோன்மென்ட் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு மழை நீர் தேங்கும் பிரச்சனை இருந்து வந்ததால், அதனை தவிர்க்க மழை நீர் வடிகால் கட்டும் பணியை கடந்த 10ம் தேதி கண்டோன்மென்ட் நிர்வாகம் மேற்கொண்டது.

சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வடிகால்வாய் கட்டப்படும் நிலையில் எவ்வித பாதுகாப்பு அம்சங்களும் இல்லாமல் பள்ளம் தோண்டப்பட்டு, கம்பிகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தனர்.

வடிகால்வாய் பக்கவாட்டில் தடுப்புகள் போடப்படாமல் பணி நடைபெறுவது குறித்த அறிவிப்பு இல்லை, பிரதிபலிப்பான் இல்லாமல் பணி நடப்பதால் அவ்வழியே நடந்து செல்பவர்கள், வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

இந்நிலையில் இன்று மழைநீர் வடிகால்வாயில், கடைக்கு வந்து விட்டு திரும்பிய போது வயதான பெண் விஜயகுமாரி(53), என்பவர் கீழே விழும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அவருக்கு மார்பு, கையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.