தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை, சீனிவாசா நகர் பகுதியில் மேம்பாலத்தின் கீழ் அரசு மதுபான கடை (கடை எண் : 4161) இயங்கி வருகிறது.

இதன் அருகே தேவாலயம், கோவில்கள், பெருங்களத்தூர் ரயில் நிலையம், பள்ளி, அத்தியாவசிய தேவைக்கான கடைகள் என பல உள்ளது.
மேலும் அவ்வழியாக பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்லும் இளைஞர்கள், பெண்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் ரயில் நிலையம் சென்று ரயில்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இவ்வாறு எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கியமான இப்பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளதால் அங்கு வரும் குடிமகன்கள் கடையில் மதுபான பாட்டில்களை வாங்கி சாலையிலேயே அமர்ந்து மது அருந்துவது, மது அருந்திவிட்டு குடிபோதையில் ஆங்காங்கே விழுந்து கிடப்பது, அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே அப்பகுதியில் உள்ள மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பீர்க்கன்காரணை பகுதி பாஜக சார்பில் உள்ளாட்சி மேம்பாட்டு அமைப்பின் மாவட்ட தலைவர் செங்கை பழனிவேல் தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் பொற்றாமரை சங்கரன் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் பேரணியாக சென்று மதுபானக் கடைக்கு முன்பு கண்டன கோஷங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல தலைவர் கஜேந்திரன், மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார், தாம்பரம் கணேஷ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பாஜக மகளிர் அணியினர் கலந்து கொண்டு அரசு மதுபானக் கடையை மூட வேண்டும் என கோரிக்கை வைத்து கோஷங்களை எழுப்பினர்.