டெல்லி: ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா சாதனை சதம் விளாசினார்.

273 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா – இஷான் கிஷன் இணை இம்முறை சிறப்பான துவக்கம் கொடுத்தது. இஷான் நிதானத்தை கடைபிடிக்க ரோகித் ஆப்கன் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தார். தொடக்கம் முதலே அதிரடியை கையாண்ட அவர், 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதன்பின் அதிரடியை கைவிடாத ரோகித் 63 பந்துகளில் சதம் பதிவு செய்தார். ரோகித்தின் கிரிக்கெட் கரியரில் சாதனை சதமாக இது அமைந்தது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ரோகித்தின் 31வது சதம் இது. இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் எடுத்தவர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை முந்தி தற்போது 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் ரோகித். முதல் இரு இடங்களில் சச்சின் (49 சதம்), விராட் கோலி (47 சதம்) உள்ளனர். அதேபோல், உலகக் கோப்பை தொடர்களில் குறைந்த பந்துகளில் (63 பந்துகள்) அதிவேக சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் பெற்றார். அதேபோல், இப்போட்டியில் ஐந்து சிக்ஸர்களை அடித்திருந்த ரோகித், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் படைத்தார். கிறிஸ் கெயில் 553 சிக்ஸர்கள் அடித்ததே இதுவரை உலக சாதனையாக இருந்தது. அதை இன்று ரோகித் முந்தினார்.

ரோகித் ஒருபுறம் அதிரடியாக விளையாட, மறுபுறம் நிதானமாக விளையாடிய இஷான் கிஷன் 47 ரன்களில் அவுட் ஆனார். ரோகித் – இஷான் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 156 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் சேர்த்தது. இதன்பின் கோலி – ரோகித் கூட்டணி சிறப்பாக விளையாடியது. எனினும், 84 பந்துகளில் 131 ரன்கள் எடுத்திருந்த ரோகித், ரஷீத் கான் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.

பின்னர் விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இணைந்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஆப்கன் பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்களால் 90 பந்துகள் மீதமிருக்கையில் இந்திய அணி இலக்கை விரட்டி வெற்றிபெற்றது. விராட் கோலி 55 ரன்களும் ஷ்ரேயாஸ் ஐயர் 25 ரன்களும் எடுத்து இறுதிவரை அவுட் ஆகாமல் இருந்தனர். நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும். ஆப்கன் தரப்பில் ரஷீத் கான் இரண்டு விக்கெட்டை வீழ்த்தினார்.

ஆப்கன் இன்னிங்ஸ்: டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, நான்கு பவுண்டரிகளுடன் சிறப்பாக துவக்கம் கொடுத்த ஆப்கன் வீரர் இப்ராஹிம் சத்ரானை 22 ரன்களில் பும்ரா விக்கெட்டாக்கினார். சில நிமிடங்களில் ரஹ்மானுல்லா குர்பாஸை 21 ரன்களில் ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார்.

ரஹ்மத் ஷாவை ஷர்துல் தாகூர் அவுட் ஆக்கிய பின் இணைந்த ஆப்கன் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதியும், அஸ்மத்துல்லா உமர்சாயும் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். 100 ரன்களுக்கு மேல் சேர்த்த இக்கூட்டணியை பிரிக்க இந்திய பவுலர்கள் கடுமையாக முயற்சித்தனர். இறுதியில், அரைசதம் கடந்து 62 ரன்கள் எடுத்திருந்த அஸ்மத்துல்லா உமர்சாயை ஹர்திக் பாண்டியா அவுட் ஆக்கினார். இதன்பின்னும் சிறப்பாக விளையாடிய ஷாஹிதி 80 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டாகினார்.

இதன்பின் வந்தவர்களை பும்ரா தனது வேகத்தால் வரிசையாக வீழ்த்தினார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் ஆப்கன் அணி 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட் குல்தீப் மற்றும் ஷர்துல் தலா ஒரு விக்கெட் எடுத்திருந்தனர்.