திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த நால்வர் வாங்கிய கேரள லாட்டரி சீட்டுக்கு, பம்பர் பரிசாக 25 கோடி ரூபாய் கிடைத்தது.
ஆனால், தமிழகத்தில் வாங்கப்பட்டதால் கள்ளச்சந்தையில் பெறப்பட்ட லாட்டரிச்சீட்டாக கருதி, பரிசு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. லாட்டரி சீட்டை விற்ற நபர் தலைமறைவாக உள்ளார்.
கேரள லாட்டரி ஓணம் பம்பர் பரிசாக, 25 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் நடந்த குலுக்கலில், ‘டிஇ 230662’ என்ற எண்ணுள்ள லாட்டரி சீட்டுக்கு 25 கோடி ரூபாய் பரிசுகிடைத்தது.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நான்கு பேர், தாங்கள் தான் டிக்கெட் வாங்கினோம் என்று கூறி கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி பவனில் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர்.
‘வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் எதற்காக கேரளா வந்தனர் என்பதற்கான உண்மையான காரணத்தை சொன்னால் மட்டுமே பரிசு தொகை வழங்கப்படும்’ என்று கேரள அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்களை பார்க்க கேரள மருத்துவமனைக்கு வந்தபோது, லாட்டரி சீட்டு வாங்கியதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தமிழகத்தை சேர்ந்த அம்புரோஸ் என்பவர், கேரள முதல்வருக்கு அனுப்பிய புகாரில், ”லாட்டரிகளை வாங்கி, தமிழகத்தில் கள்ளசந்தையில் விற்றுள்ளனர். அவர்களுக்கு தான் பரிசு விழுந்துள்ளது; பரிசு தொகையை சமூக சேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும்” என்று கூறியிருந்தார். இரு மாநில உளவுப்பிரிவு போலீசாரும் விசாரித்தனர்.
போலீசார் கூறுகையில், ”திருப்பூர் மாவட்டம், சேவூர், சின்ன ஓலப்பாளையத்தை சேர்ந்த நடராஜன், 45 என்பவர், கேரளா சென்று லாட்டரிகளை வாங்கிவந்து விற்பதை வழக்கமாக கொண்டிருந்தார். தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை உள்ளது. தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை தொடர்பாக நடராஜன் மீது ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
கேரள மாநிலம், பாலக்காடு, வாளையார் டேம் ரோட்டில் வழக்கமாக தான் வாங்கும் கடையில், பத்து லாட்டரிகளை, நடராஜன் வாங்கியுள்ளார். பின், அதை திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த, 4 பேருக்கு விற்றுள்ளார்.
தற்போது, விசாரணையில், கேரளாவுக்கு மருத்துவமனைக்கு வந்த போது, லாட்டரி வாங்கியதாக கூறப்பட்டது பொய்; அதேசமயம் கேரளாவில் நடராஜன் வாங்கி சென்ற, பத்து லாட்டரி சீட்டில் ஒன்றுக்கு தான் பரிசு விழுந்தது உண்மை என்பதுதெரியவந்தது.
கேரளாவில் வாங்கி வந்து தமிழகத்தில் விற்கப்பட்டதால், பரிசு விழுந்த லாட்டரி சீட்டு கள்ளச் சந்தையில் விற்கப்பட்டதாக கருதப்படுகிறது. எனவே, பரிசுத்தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடராஜன் தற்போது தலைமறைவாக உள்ளார்” என்றனர்.