அதற்கான மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தின் வருவாயை பெருக்கும் நோக்கத்தில், ஐ.எப்.எம்.எல். மீது விதிக்கப்படக்கூடிய ஆயத்தீர்வையை உயர்த்தும் சட்ட மசோதாவை சட்டசபையில் அமைச்சர் முத்துசாமி நேற்று அறிமுகம் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: மாநில வருவாயை பெருக்கும் நோக்கத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் மீது விதிக்ககூடிய ஆயத்தீர்வையின் அதிகபட்ச தொகையை, சாதாரண வகைகளுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ. 250-ல் இருந்து ரூ. 500-க்கும்; நடுத்தர வகைகளுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ. 300லிருந்து ரூ. 600க்கும்; உயர்தர வகைகளுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ. 500லிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டப் பிரிவில் அதற்கேற்ற வகையில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. அதற்கு வழிவகை செய்ய இந்த சட்டம் மசோதா அறிமுகம் செய்யப்படுகிறது.