ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதற்காக 3 லட்சம் வீரர்களை இஸ்ரேல் குவித்து உள்ளது.
டெல் அவிவ்,
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி, அதிரடியாக தாக்குதல்களை நடத்தியது. இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் உள்ளனர். இஸ்ரேலும், படைகளை குவித்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் 1,200 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பதிலடி தரும் வகையில், 48 மணிநேரத்தில் 3 லட்சம் வீரர்களை இஸ்ரேல் குவித்து உள்ளது. இதுவரை இல்லாத வகையில் விரைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
1973-ம் ஆண்டு யோம் கிப்பூர் போரின்போது, 4 லட்சம் படை வீரர்கள் குவிக்கப்பட்டதே அதிக எண்ணிக்கையாக இருந்தது என டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.
எல்லையில் உள்ள 24 நகரங்களில் 15 நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து இந்த பணி நடைபெறும் என ராணுவம் தெரிவித்து உள்ளது.