சென்னை, மாதவரம் ஆவின் பால் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டு, திங்கட்கிழமை (09.10.2023) அன்று வடசென்னை பகுதிகளில் உள்ள பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட ஊதா நிற “ஆவின் டிலைட் பால்” பாக்கெட்டுகள் 100கிராம் எடை குறைவாக (415கிராம்) வந்த 24மணி நேரத்திற்குள் மற்றொரு பேரதிர்ச்சியாக இன்று (10.10.2023) அதிகாலை மத்தியச் சென்னை பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டில் 135கிராம் எடை குறைவான (385கிராம்) பால் பாக்கெட்டுகள் வந்திருப்பது பால் முகவர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல் நாள் 100கிராம், இரண்டாவது நாள் 135கிராம் என தொடர்ந்து இரண்டாவது நாளாக ஒரே பால் பண்ணையில் இருந்து பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் சுமார் 100கிராமிற்கும் மேல் எடையளவு குறைவாக விநியோகம் செய்யப்பட்டுள்ளதைப் பார்க்கும் போது பால் பாக்கெட்டுகளை யார் அளந்து அல்லது எடை போட்டுப் பார்க்கப் போகிறார்கள்..? எடையளவு குறைவான பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்தால் யார் கண்டு பிடிக்கப் போகிறார்கள்..? என்கிற தைரியமே ஆவினில் தொடர் மோசடிகள் நடைபெற காரணமாக அமைந்துள்ளது.
குறிப்பாக ஆவின் பால் பண்ணையில் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி நடைபெறும் போது பால் பாக்கெட்டுகளின் எடை அளவு மற்றும் தரம் சரியாக இருக்கிறதா..? என்பதை தவறாமல் கண்காணிக்க வேண்டிய உற்பத்தி பிரிவு, தரக்கட்டுப்பாட்டு பிரிவு மேலாளர்கள், துணைப் பொது மேலாளர் (டெய்ரி), Shift Officer (DGM, Control), மற்றும் எடையளவு குறைவான அல்லது லீக்கேஜ் ஆன பால் பாக்கெட்டுகளை விநியோகத்திற்கு அனுப்புவதை நிறுத்த வேண்டிய பால் பண்ணை மேலாளர் (Marketing), Control Room அதிகாரிகள் என ஒரு பெரும் பட்டாளமே தங்களின் பொறுப்பை தட்டிக் கழித்து மெத்தனமாக செயல்பட்டு வந்திருப்பது தெளிவாக தெரிகிறது. பால் பாக்கெட்டுகள் எடையளவு விவகாரத்திலேயே இவ்வளவு மெத்தனமாக, அலட்சியமாக ஆவின் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர் என்றால் பாலின் தரத்தில் எவ்வளவு மெத்தனமாக, அலட்சியமாக நடந்திருப்பார்கள் என்பதை நினைக்கும் போதே உடலெல்லாம் நடுங்குகிறது.
மேலும் தொடர்ந்து மெத்தனமாகவும், அலட்சியமாகவும் செயல்பட்டு வரும் ஆவின் அதிகாரிகள் மீது சாட்டையை சுழற்றி, தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய, IAS நிலையில் உள்ள இணை நிர்வாக இயக்குனர் பொறுப்பு கடைசியாக சராயு ஐஏஎஸ் அவர்களுக்குப் பின் நீண்ட காலமாகமே காலியாக இருப்பதும், அந்த பொறுப்பை, “பொறுப்பற்ற DGM” (நிதி) அவர்களிடம் கொடுத்து விட்டு, ஆவின் மீது எவ்வளவு புகார்கள், குற்றச்சாட்டுகள் வந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளவே மாட்டேன் என்கிற ரீதியில் நிர்வாக இயக்குனர் வாய் மூடி மெளனமாக இருப்பதும் தான் ஆவின் பால் பாக்கெட்டுகள் தொடர்ச்சியாக எடையளவு குறைவாகவும், பாலின் தரம் மோசமாக இருப்பதாகவும் கூறி புகார்கள் வருவதற்கும், மோசடிகள் அரங்கேறுவதற்கும் பெரும் காரணமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.
இணைப்பு :- எடையளவு குறைவான ஆவின் பால் பாக்கெட் காணொளி.
நன்றி
சு.ஆ பொன்னுசாமி
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
அலைபேசி :- 9600131725
கட்செவி அஞ்சல் (WhatsApp) :- 9566121277
10.10.2023 / காலை 9.23மணி.