சென்னை: டெல்லியில் கடந்த இரு நாட்களாக தங்கியிருந்த அண்ணாமலை, நேற்று அமித்ஷா மற்றும் நட்டாவை சந்தித்துப் பேசினார். அதன்பின்னர் அண்ணாமலையை மாற்றுவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு சில அறிவுரைகளை மட்டும் வழங்கி அனுப்பியுள்ளனர். மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கூட்டணி உடைந்ததை ஒட்ட வைக்க எந்த நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. அதிமுக, பாஜ இடையே மோதல் ஏற்பட்ட பிறகு அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவிடம் நேரடியாக கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை ஏற்க அமித்ஷா மறுத்து விட்டார். முன்னதாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அதையும் அவர்கள் ஏற்கவில்லை. இந்த மோதலுக்கிடையே அண்ணாவைப் பற்றி பேசியதால், கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தது. இதனால் அண்ணாமலையை மாற்றினால் கூட்டணி மீண்டும் சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வந்தார். பாஜவினருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவின்படி அதிமுக கூட்டணி கண்டிப்பாக வேண்டும் என்று மேலிடத்துக்கு அறிக்கை அளித்தார். இதனால் அண்ணாமலையை டெல்லி வரும்படி மேலிடம் அழைத்தது. இதற்காக அவர் டெல்லி சென்றார்.
டெல்லியில் மோடி மற்றும் அமித்ஷாவை ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் சந்திக்க அனுமதி கேட்டார். ஆனால் அனுமதி மறுத்து விட்டனர். இதனால் நிர்மலா சீதாராமன், பி.எல்.சந்தோஷ், நட்டா ஆகியோரை மட்டும் அண்ணாமலை சந்தித்தார். ஆனால் அமித்ஷாவை சந்திக்காவிட்டால் தனது பதவிக்கு ஆபத்தாகிவிடும் என்று கருதி டெல்லியில் தங்கியிருந்தார். நேற்று பிற்பகல் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார். தனது தரப்பு விளக்கத்தை தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த தலைவர்கள், உங்களை உடனடியாக மாற்ற விரும்பவில்லை. நாங்கள் சொல்லும்வரை அதிமுகவைப் பற்றியோ, அதன் தலைவர்களைப் பற்றியோ எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம்.
அதிமுக ஊழல் பட்டியலையும் வெளியிடக் கூடாது. அது பற்றியே வாய் திறக்கக் கூடாது. உண்மையான எதிர்க்கட்சியாக மட்டும் செயல்பட்டால் போதுமானது என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து பாஜ தலைவர் அண்ணாமலை, நேற்று இரவு 8.30 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் பேட்டி எடுப்பதற்காக குவிந்திருந்தனர். விமானத்தை விட்டு இறங்கி, வெளியில் வந்த அண்ணாமலை, செய்தியாளர்கள் நின்றிருந்த பகுதிக்கு வந்து, இன்னும் இரண்டு நாட்கள் கழித்து, நான் உங்களிடம் பேசுகிறேன் என்று கூறிவிட்டு, காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
அண்ணாமலையை மாற்ற வேண்டாம் என்று தலைமை முடிவு எடுத்துள்ளதால், அதிமுக தலைவர்களும் கூட்டணி உடைந்தது, உடைந்ததுதான். இனி எந்தக் காலத்திலும் பாஜவுடன் கூட்டணி இல்லை. அதேநேரத்தில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம். மோடி, அமித்ஷா ஆகியோரை திட்ட வேண்டாம். அண்ணாமலை பேசினால் அவருக்கு மட்டும் பதிலடி கொடுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி, இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தமிழக அரசியல் இனி களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.