மகா+ஆலயம் என்பதே மகாளயம் என்றானது ஆன்மாக்கள் லயிக்கும் இடம் என்பதே ஆலயம். அதாவது முன்னோர்களின் ஆன்மாக்கள் பூவுலகில் வந்து லயிக்கும் நாட்களே மகாளய பட்சம் எனப்படும். இந்த மகாளய பட்சத்தில் யமதர்மனின் அனுமதியோடு நமது முன்னோர்கள் அனைவரும் பூமிக்கு வருகிறார்கள் என்றும் அவர்கள் சூரியனின் ஒளிக்கதிர்கள் வழியாக வருகிறார்கள் என்றும் கருடபுராணம் கூறுகிறது.
அவ்வாறு அவர்கள் வரும்போது தங்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் என அனைவரும் தங்களை நினைக்கிறார்களா? உணவும் நீரும் வழங்குவார்களா? என்ற ஏக்கத்தோடு வருவார்கள். அப்போது நாம் அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளையோ, பழ வகைகளையோ தானம் செய்தால் அவர்களின் தாகமும், பசியும் தீர்ந்து மகிழ்வுடன் திரும்பி செல்வார்கள் என்பது நம்பிக்கை.