உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்த சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல், காயம் காரணமாக விலகினார். இதையடுத்து கடைசி நேரத்தில் அணிக்குள் கொண்டு வரப்பட்டார் 36 வயதான அஸ்வின்.
இந்நிலையில் நேற்று குவாஹாட்டியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: உண்மையை சொல்ல வேண்டும் என்றால், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவேன் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எப்போதும் கிரிக்கெட்டை ரசித்து விளையாட வேண்டும் என்பதே கடந்த 5 ஆண்டுகளில் எனது தாரக மந்திரமாக உள்ளது.
இந்த உலகக்கோப்பை தொடரையும் ரசித்து விளையாட விரும்புகிறேன். உலகக்கோப்பை போட்டிக்காக இந்திய வீரர்கள் அனைவரும் தீவிரமாக தயாராகி வருகிறோம்.
அதேபோல் எதிரணியின் அழுத்தத்தை சமாளிக்க பயிற்சி பெற்று வருகிறோம்.
உலகக்கோப்பை தொடரில் அனைத்து வீரர்களுக்கும் அழுத்தம் என்பது உச்சத்தில் இருக்கும். ஆனால் எனக்கு இந்த உலகக்கோப்பையை ரசித்து விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
இது எனது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கலாம். இந்தப் போட்டியை சிறப்பாக முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.